நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை சோதனை செய்ய மூடப்பட்ட தனி அறைகளை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தகுதித் தேர்வு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், நீட் தேர்வு எழுதினர். மொழி தெரியாத இடத்தில் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டனர். மேலும் நீட் தேர்வு மையங்களில் மாணவிகளை துப்பட்டா போட அனுமதிப்பதில்லை, சோதனை செய்ய தனி அறை இல்லை, கைக்கடிகாரம் கொண்டு செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளால் மாணவிகள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்க போதுமான வாய்ப்பு இருக்கும்போது வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைப்பது தவறானது. ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு, " நீட் தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கவும், அனைத்து தேர்வறைகளிலும் சுவர் கடிகாரம் அமைக்கவும், மாணவிகள் துப்பட்டா அணிய அனுமதிக்கவும், மாணவ, மாணவியரை பரிசோதிக்க தனி அறை வசதிகளை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாணவிகள் துப்பட்டா அணிய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மூடப்பட்ட சோதனை அறைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..