தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்டி, எம்எஸ்) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார் தாக்கல் செய்த மனு:
நான் 2009ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படித்து முடித்து, தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஜனவரி 6 -ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 1200க்கு 385 மதிப்பெண் பெற்றுள்ளேன்.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்  தமிழக பொது சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு 10 சதவீத கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதால், எங்களைப் போன்ற அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும்.
எனவே தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் அதற்கு தடை விதிக்க முடியாது.

அதேநேரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என  உத்தரவிட்டார். மேலும், இந்தமனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here