சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்டவற்றில் 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான சாந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்ப படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும், ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விடக்கூடாது என தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்களின் தபால் வாக்களிக்கும் விண்ணப்ப படிவங்கள் சாதாரண காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. காவல்துறையைச் சேர்ந்த 90 ஆயிரம் பேர் முழுமையாக தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் பணியில் ஈடுபட்ட எத்தனை அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

தபால் வாக்குகள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாக்களிக்கத் தவறிய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்களை முறையாக வழங்கி, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "நடந்த முடிந்த தேர்தல் பணியில் மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தும் வகையில் படிவம் 12 மற்றும் படிவம் 12-ஏ வழங்கப்பட்டன. இவர்களில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பித்தனர்.

அவற்றில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பாகம் எண், தொகுதி, வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றை சரியாக குறிப்பிடாமலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பட்டியலுடனும் பொருந்தாத 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

எனவே ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களின் ஒன்றரை லட்சம் வாக்குகள் விடுபட்டுள்ளன என்பது தவறான குற்றச்சாட்டு' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசுப் பணியாளர்களின் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இரண்டு நாள்களுக்குள் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
மேலும், எதிர்காலங்களில் தபால் வாக்களிக்கும் போது, நடைமுறையில் உள்ள இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.