தமிழக அரசின் நிதி துறை இணையதளம், ஜவ்வாக இழுப்பதால், ஊதிய விபரங்களை பதிவு செய்ய முடியாமல், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பாக, புதிய ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நிபந்தனை

பல நுாறு கோடி ரூபாய் செலவில், 'விப்ரோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுஉள்ளது. இந்த தளத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சுயவிபரங்கள் மற்றும் ஊதிய விபரங்களை பதிவு செய்ய, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த தளத்தில் விபரங்கள் பதிவு செய்யப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, வரும் மாதங்களில் சம்பளம் கிடைக்காது என்றும், நிதித் துறை நிபந்தனை விதித்துள்ளது.

இதற்காக, கோடை விடுமுறையில் உள்ள ஆசிரியர்களை அழைத்து, ஆசிரியர்களின் விபரங்களை, 'ஆன்லைன்' வழியே பதிவு செய்யும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுஉள்ளனர்.ஆனால், இந்த நிதி மேலாண்மை இணையதளம், சரியான தொழில் நுட்பத்துடன் இல்லாததால், ஜவ்வாக இழுப்பதாக, புகார் எழுந்துள்ளது. 


பெரும்பாலான நேரங்களில், 'எரர்' என்ற பிழை பக்கத்தை காட்டும், இந்த தளத்தின் செயல்பாடு, ஆசிரியர்களின் பெரும்பாலான பணி நேரத்தை வீணடித்து விடுவதாகவும், புகார் எழுந்துள்ளது.'விப்ரோ' நிறுவனம்ஒவ்வொரு ஆசிரியர்களின் விபரங்களையும் பதிவு செய்ய, பல நாட்கள் ஆகின்றன. பள்ளிகள் திறந்த பின்பும், இதே நிலை நீடித்தால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:நிதி துறை இணைய தளத்தில், ஊதிய விபரங்களை கட்டாயம் பதிய வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது குறித்து, சரியான தொழில்நுட்ப வழிகாட்டுதலோ, உதவிகளோ இல்லை.ஏதாவது பிரச்னை என்றால், இணையதளத்தை பராமரிக்கும், 'விப்ரோ' நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறுகின்றனர். 

அதற்காக, அதிகாரிகள் வழங்கிய, மொபைல்போன் எண்களில், பெரும்பாலும் யாரும் பதில் அளிப்பதில்லை. இணையதளத்தை இயக்கவே முடியாத அளவுக்கு, அது மெதுவாக இயங்குகிறது. எனவே, இணையதளத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றினால் மட்டுமே, 'ஆன்லைன்' பதிவுகளை மேற்கொள்ள முடியும் என, அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here