*அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், மே, 31ல், ஓய்வு பெறுவதன் மூலம், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து, இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மே மாதத்தில், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்*

*தற்போது, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இதனால், கலந்தாய்வு நடத்தினாலும், ஆசிரியர்களுக்கு பயனாக இருப்பதில்லை*

*கல்வியாண்டின் இடையே, ஓய்வு வழங்கப்படுவதில்லை என்பதால், மே, 31ல், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்*

*நடப்பு கல்வியாண்டில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஜூனுக்கு பின்தான், கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது*

*ஆண்டுதோறும் கலந்தாய்வில், கடந்த ஆகஸ்ட் மாத மாணவர், ஆசிரியர் விபரத்தை அடிப்படையாக கொண்டே, இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால், சில ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு பயனளிக்கவில்லை*

*இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது*

*ஆண்டுதோறும், எங்களுக்கான இடமாறுதல், கோடை விடுமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, முன்கூட்டியே விபரம் சேகரிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், மே மாதத்தில் கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை*

*இதனால், மே, 31ல், ஓய்வு பெறப்போகும் ஆசிரியர் பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக கருதி, கலந்தாய்வில் சேர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கலந்தாய்வு பயனாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்