விருதுநகர்:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி சார்பில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஒரு நாள் நிகழ்ச்சிகளுக்கான படபிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான மாணவ மாணவியரைத் தேர்வு செய்யும் பணி அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது.
காமராஜர் தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.
2006 ம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதியை தமிழக அரசு கல்வி வளர்ச்சி கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு கல்வி வளர்ச்சி நாள் மேலும் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காமராஜர் பிறந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும்  அரசு உதவி பெறும் முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியரைக் கொண்டு அனைத்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளது.
மழலை மொழிகள்: தொடக்க கல்வி மாணவர்களின் ஜாலியான நேர்காணல். குழந்தைகளிடம் காமராஜரின் உருவப் படத்தைக் காண்பித்து, காமராஜரைப் பற்றி கேள்வி கேட்டு குழந்தைகளுக்கு அவரின் பெருமையை தெரியவைத்தல். குழந்தைகளின் நகைச் சுவையான பதில்களும் அடங்கும்.
காமராஜரும், கல்வி அமைச்சரும்: காமராஜரின் பெருமைகளை வெளிப்படுத்தும் வாழ்த்துக்களுடன் காமராஜரின் நினைவிடமான அவரது இல்லத்திலிருந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் ஓர் நேர்காணல்.
கிராமிய கல்வி விழிப்புணர்வு பாடல்: அரசு பள்ளியில் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பாடல்களின் தொகுப்பு. அரசு பள்ளி மாணவர்களுடன் கிராமிய இசை பாடகர்கள் கானா பாலா, கானா செந்தில், கானா சின்னபொன்னு, கானா ராஜலட்சுமி ஆகியோருடன் கலகலப்பான உரையாடல்.
கதை சொல்லி: கதைகள்தான் எளிய மனிதர்களின் கலை வடிவம். கதை சொல்வதற்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ். பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறனை வளர்க்க தமிழில் சிறந்த கதை சொல்லிகளைக் கொண்டு மாணவர்களுக்கு கதை சொல்லல் பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்படும்.
நண்பனும் நானும்: காமராஜரின் குணநலன்களை குறி்த்து பேசும் அவரப்பற்றி நன்கு தெரிந்த சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் மற்றும் ரவீந்திரன் துரைசாமியுடன் நேர்காணல்.
கவிதையான காமராஜ்: காமராஜரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்படும் கவிதை எழுதும் போட்டி நடத்தி, அந்த கவிதையை வர்ணனையாய் சொல்லும் போட்டி நடத்தப்படும். சிறந்த கவிதை, சிறந்த வர்ணனை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
நவரசம்: மாணவர்களின் கலைத்திறனை குழுவாக வெளிப்படுத்த மைமிங் நடிப்பு. வார்த்தைகள் இல்லா மியூசிக்கல் நாடகம். தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நாடகங்களாக இருக்க வேண்டும். சிறந்த நடிப்புத் திறன் வெளிப்படுத்தும் குழுவிற்கு பரிசு வழங்கப்படும்.
பட்டிமன்றம்: பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம். தலைப்பு: மாணவர்கள் படிப்பதற்குத் தேவையானது  புத்தகமா? நேரமா? பட்டிமன்ற நடுவர் சிகி சிவம் அல்லது பர்வீண் சுல்தானா.
நடனப் போட்டிகள்: தமிழர்களின் பாரம்பரிய நடன முறைகளை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் குழுவாக பயிற்சி பெற்று காமராஜர் புகழ் பாடும் பாடல்களுக்கு நடனம் ஆடி திறமையை நிரூபிக்க வேண்டும். சிறந்த நடனக் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும். கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், கரடி ஆட்டம், புலி ஆட்டம், பேய் ஆட்டம்.
தமிழர் விளையாட்டு: பள்ளி மாணவர்கள் மத்தியில் நம் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்த... கில்லி சில்லாக்கு, பல்லாங்குழி, பம்பரம், ஆடுபுலியாட்டம், பாண்டியாட்டம், நொண்டி, தாயம் உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை விளையாட வைத்து மாணவர்களின் அனுபவங்களைப் படம் பிடித்தல். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
கண்டுபிடி கண்டுபிடி: மாணவர்களின் மூளை செயல்பாடுகளை தூண்டும் வகையில் கொடுக்கப்படும் சீட்டில் இருக்கும் க்ளுவைப் பயன்படுத்தி, விடையைக் கண்டுபிடித்து அங்கு பெட்டியில் தனித்தனியாக இருக்கும் தமிழ் எழுத்துக்களை கண்டுபிடித்து வரிசைப்படுத்தும் போட்டி.
தனித்திறன்: மாணவர்கள் அனைவரும் அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த பொதுமேடை போட்டிகள் நடத்தப்படும். நகைச்சுவைப் பேச்சு, பலகுரல் பேச்சு, வார்த்தை இல்லா இசைத்தொகுப்பு நடனம்.
ஓவியப் போட்டி: வண்ணம் இல்லா ஓவியப் போட்டி. காமராஜரின் உருவம், அவரின் நலத்திட்டங்களை விளக்கும் ஓவியங்கள் வரையலாம். சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.
கணிதம்: மாணவர்களிடம் மனக்கணக்குத் திறனை மேம்படுத்த உடனடியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என ஒன்று முதல் 4 இலக்க எண்கள் கொடுத்து மாணவர்களிடம் விடை காணச் செய்யும் போட்டிகள்.
மறைபொருள் தேடல்: மாணவர்கள் அரங்கத்தில் ஒரு 5 இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள துண்டு சீட்டுகளை கண்டு் பிடித்து பரிசு பொருளைக் கண்டுபிடித்தல். விரைவில் கண்டுபிடிக்கும் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படும்.
காமராஜரின் ஆவணப்படம்: இன்றைய மாணவர்கள் காமராஜரின் நற்செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஓர் ஆவணப்படம் தயாரித்து ஒளிபரப்புதல்.
நினைவூட்டல் தொகுப்பு: காமராஜரிந் செயல் திட்டங்கள் குறும் தொகுப்புகள், கல்விக் கண் திறந்தவர் இரண்டு நிமிட ஆவண தொகுப்பு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் பொழுதும் ஒளிபரப்பப்படும். மொத்தம் 16 குறும் தொகுப்புகள் இடம் பெரும்.
படப்பிடிப்புகள் விருதுநகர் மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தயாரிப்புக்கான ஏற்பாடுகளை கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள திறமையான மாணவ மாணவியரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 24 ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளரை 7010581070 மற்றும் 9944449279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here