துப்புரவுப் பணியாளர்,  மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர் உள்ளிட்ட கடைநிலை பணிகளுக்கும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசின் தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனியைச் சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்த மனு:  கடந்த 2011 பிப்ரவரி 9 -ஆம் தேதி சேகர் என்பவர் காமயக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலராக நியமிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளியான நான்  8 -ஆம் வகுப்பு முடித்த நிலையில் 1998 -ஆம் ஆண்டே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். ஆனால், எனக்கு பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சேகர் என்பவர் காமயக்கவுண்டன்பட்டி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இரவு காவலராக சேகரை நியமித்ததை ரத்து செய்து என்னை அந்த பணிக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் பணி நியமனம் பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்பு உதயகுமார் இந்தக் கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்துள்ளார். 8 ஆண்டுகள் பணி செய்துள்ள சேகரின் பணிநியமனத்தை ரத்து செய்ய முடியாது.  இருந்தபோதும் இதுபோன்ற பணி நியமனங்களில் எவ்விதமான விதிகளும் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வருகிறது. உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை  பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த பணிகள் அனைத்திலும் விதிகளுக்கு உள்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கிறார்கள். இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தமிழகத்தை பொருத்தவரை நேர்முகத்தேர்வு
அடிப்படையில் தான் தேர்வு நடைபெறுகிறது. அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பரிந்துரை அடிப்படையில் பெரும்பாலான பணிநியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே, துப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. இதுதொடர்பாக தலைமை செயலர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை ஜூலை 24 -ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here