இயற்கையின் காவலர்களாக மாணவர்களை மாற்றி வரும் ஆசிரியர்!
அண்மைக்காலமாக உலக அரங்கில் பேசுபடு பொருளாகவும் தொடர்ந்து விவாதிக்கும் கருத்தாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருந்து வருகிறது. புவி வெப்பமடைதல் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. மரம் வளர்ப்பும் நெகிழிப் பயன்பாடுகள் தவிர்ப்பும் இதற்கு இன்றியமையாதவை ஆகும். போதிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. தங்கள் மனங்களைத் தலைசிறந்த வகையில் ஆகச்சிறந்த செயல்களால் பாதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் கொண்டாடுவர். 

அத்தகைய வரிசையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் வெள்ளங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி கணித பட்டதாரி ஆசிரியாகப் பணிபுரிந்து வரும் திருமிகு பெ.சோமசுந்தரம் அவர்கள் தனிமுத்திரை பதித்து வருகிறார். இவர் தற்போது பணியாற்றி வரும் வெள்ளங்கால் பகுதியானது நீர்வளம் குறைந்த பகுதிகளுள் ஒன்று. ஆகவே, விவசாயத்திலும் தொடர்ந்து இப்பகுதி பின்தங்கியே காணப்படுவதைக் கண்டு வேதனையடைந்த இவர், மாணவர்களை இயற்கையின் காவலர்களாகவும் காதலர்களாகவும் மாற்றிட பெருமுயற்சிகள் மேற்கொண்டு பசுமைப்படை ஒன்றை உருவாக்கிப் பல்வேறு பசுமைப் பாதுகாப்பு செயல்திட்டங்களை மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது. 

நிலத்தடி நீர்வளம் பாதுகாக்க, தம் பசுமைப்படை துணையுடன் 2016 - 17 முதற்கொண்டு சற்றேறக்குறைய 20,000 க்கும் மேற்பட்ட பனைவிதைகளைப் பூமியில் பதித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னோடி நிகழ்வாகும். மேலும், இதன் ஒரு பகுதியாக, இக்காலகட்டத்திலிருந்து இன்று வரை சற்றேறக்குறைய 50,000 விதைப்பந்துகளை மாணவர்கள் மூலமாக உருவாக்கி, அவற்றை மழைக்காலங்களில் ஆற்று ஓடை, மணல்திட்டு போன்ற விதை முளைக்கும் இடங்களில் தாமே முன்மாதிரியாக இருந்து மாணவர்களுடன் நல்லெண்ண முயற்சியோடு அவ்விதைப்பந்துகளை வீசிவருவது உலகம் காக்கும் நற்பணியாகும். 

அதுபோல, இப்பகுதியில் நீக்கமற நிறைந்து காணப்படும் நிலத்தடி நீர் குறைவிற்கு காரணமாக விளங்கும் சீமைக்கருவேல மரங்களையும் விதைகளையும் அழித்தொழிக்கவும் இவரது பசுமைப்படை முடிவெடுத்தது. இதன் பலனாக, 2015 திசம்பரில் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரச்செடிகளை மீண்டும் முளைக்காதவாறு வேருடன் பிடுங்கி அழித்தது ஒரு மாபெரும் சாதனை நிகழ்வாகும். இதுதவிர, ஊரெங்கும் கொட்டிக்கிடந்த 5 இலட்ச சீமைக்கருவேல விதைக்கொத்துக்களை முறையே சேகரித்துப் பாதுகாப்பாக அழித்தொழிப்பு செய்ததும் போற்றத்தக்க செம்மைப்பணி ஆகும். பூமிக்குக் கேடுகள் விளைவிக்கும் இச்சீமைக் கருவேல மரச்செடிகளை தம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீளவும் முளைவிடாதிருக்க மாணவர்களை முடுக்கித் தொடர்ந்து இயங்க வைத்து வருவதென்பது பயனுள்ள தொடர்பணியாகும் எனலாம்.

தம்மிடம் படிக்கும் மாணவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பொருட்டு, அவர்களை இளையோர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாக்கிப் பல்வேறு சமுதாய பணிகளில் இளம் வயதிலேயே ஈடுபடுத்தி வருவதென்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஊர் மக்களிடையே சீமைக்கருவேல மர ஒழிப்பு, நெகிழிப் பயன்பாடுகள் தவிர்ப்பு, நூறு விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரும் பாராட்டி மகிழும் செய்கைகளாவன.

மேலும், பள்ளி மாணவர்கள் தம் கற்றலுக்குத் தேவையான குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றிற்காக நெடுந்தொலைவு சென்று வாங்குவது பெரும் சிரமமாக அவர்களுக்கு இருப்பதை உணர்ந்து, பள்ளியில் மாணவர் அங்காடி ஒன்றை நிறுவியும் மாணவர்களையே அதை நிர்வகிக்க வைத்தும் தீர்வு கண்டார். இதற்கு உறுதுணையாக ரூ.7000/= மதிப்பில் இரும்பு அலமாரி ஒன்றும் ரூ.10000/= மதிப்பிலான கற்றல் பொருள்களும் வாங்கித் தந்து உதவினார். ஆண்டு முடிவில் வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பெற்று கிடைக்கும் இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டு மாணவர்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பாகும். 

பொதுவாக கணிதப் பாடம் என்பது மாணவர்களிடையே சற்று கசப்பை ஏற்படுத்துவதாகவே காணப்படும். இவர் தம் தனித்துவம் மிக்க கற்பிப்பு முறைகளால் கசக்கும் 
கணிதத்தைக் கற்கண்டாக்கி வருகிறார். சான்றாக, எளிதில் புரிந்து கொள்ள முடியாத கணிதக் கருத்துக்களைப் பல்வேறு துணைக்கருவிகள் உதவியுடன் தாமே செய்து கற்றல் முறையில் மாணவர்களிடையே எளிதில் புரிய வைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன.
மாணவர்களை வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் புகுத்தாமல் இயற்கையின் மீது தீராத பற்றும் சமூகத்தின் மீது பேரன்பும் மிக்க மாமனிதர்களாக உருவாக்கி வரும் ஆசிரியர் பெ. சோமசுந்தரம் என்பார் ஓர் ஒளிரும் ஆசிரியர் என்பதில் ஐயமுண்டோ?
தொடர்வார்கள்...

  முனைவர் மணி கணேசன்

நன்றி : திறவுகோல் மின்னிதழ்

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here