தற்போது அனைத்து தரப்பு மக்களும் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும்பாலாக பயன்படுத்துவது வாட்ஸ்-ஆப் செயலி தான். முதலில் நிபந்தனைகள் இல்லா குறுந்தகவல்கள் அனுப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த செயலியில் தற்போது, போட்டோ, வீடியோ மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குத் தேவையான பணத்தையும் கூட அனுப்பும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செயலி வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்த வாட்ஸ் அப் செயலியை முடக்கப்படுவது, ஹாக்  செய்யப்படுவது போன்ற மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த செயலி சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ முடியாத அளவுக்கும் முடக்கப்பட்டது.



இதற்குச் சீனா கார்ப்பரேட் கம்பெனி ஒன்று மலேசியாவின் இண்டர்நெட் சர்வரை ஹாக் செய்தது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதுவொரு பக்கம் இருக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாகதான் இந்த நிகழ்வுகள் நடைப்பெறுவதாகவும் இனி இது தினமும் தொடரும் என்றும் சில செய்திகள் அச்செயலியிலே உலாவரத் தொடங்கியது.



அதில் வாட்ஸ் அப் இனி இந்தியாவில் இரவு 11:30 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை செய்யாது, தவறான தகவலை பார்வார்ட் செய்பவர்களின் வாட்ஸ் அப் முடக்கப்படும், மேலும் அந்த பார்வார்ட் மெசேஜ் 48 மணி நேரத்தில் தானாக டெலிட் ஆகிவிடும், முடக்கப்பட்ட செயலியை மீண்டும் தொடங்க ரூ.499 செலுத்தி மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் உட்படப் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதன் உண்மை தன்மை ஆராய்ந்ததில், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் சார்பில் இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனம் இது போன்ற உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு உலகமெங்கும் இண்டர்நெட் செவை செயலிழந்ததால் தான் அது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வாட்ஸ் அப் மட்டுமல்ல இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளும் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here