.
                        புதுக்கோட்டை, ஜூலை.31: புதுக்கோட்டை  அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.


 இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது: அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி இடம் தொடர்பான விபரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை(emis) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் வருகைப் பதிவினை தினசரி காலை முதற் பாட வேளை, மதியம் முதற் பாட வேளை ஆகிய நேரங்களில் டி.என் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் தொடர்பாக குறுந்தகவல் செய்தி அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் வருகை நேரத்தை சரியாக தலைமையாசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் புதுக்கோட்டையில் எண் 1 டி இரண்டாவது தளம் அவதார் வளாகம் புதுக்கோட்டை622001, பொன்னமராவதியில் எண்118/4 முதல் தளம், அண்ணாசாலை, பொன்புதுப்பட்டி 4 வது ரோடு, பொன்னமராவதி622407, ஆலங்குடியில் எண்52/113, காந்தி சாலை, ஆலங்குடி622301,அறந்தாங்கியில் எண் 33/7, லக்கி வளாகம், தாலுகா அலுவலக சாலை, அறந்தாங்கி 614616 என்ற முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் முன்னேற்பாடாகநாள் திட்டத்தினையும், வருடாந்திர திட்டத்தினையும் வகுத்துக் கொள்ள வேண்டும். உங்களது பள்ளியில் சிறப்பாக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும், சிறப்பாக படிக்கும் மாணவர்களையும், சிறந்த பள்ளியாக செயல்படுகிறதா என்பதனையும் தலைமையாசிரியர்களாகிய நீங்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள் பாட வேளை, பதிலிப்பதிவேடு ஆகியவற்றை மேற்பார்வை செய்ய வேண்டும். ஆசிரியர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். நகர்வுப் பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத்திட்டத்தினை முறையாக எழுதியுள்ளார்களா என்பதனையும், கற்பித்தல் துணைக்கருவிகளோடு சென்று பாடம் கற்பிக்கிறார்களா என்பதனையும் தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மை குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தியும், போட்டிகள் நடத்தியும் புகைப்படத்துடன் அறிக்கை அனுப்ப வேண்டும். நூலகத்தில் புத்தகப் பயன்பாட்டினை உறுதி செய்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது பகுதி எல்லைக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உங்களது பள்ளியில் 6,9 ஆகிய வகுப்புகளில் சேர்ந்து வாசிக்க தெரியாமல் உள்ள மாணவர்களின் விபரங்களை அளிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு கழிப்பறையினையும், பள்ளி வளாகத்தினையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலைப் பயணம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்களை பார்த்து அதன் படி செயல்பட வேண்டும். தலைமையாசிரியர்கள் முன்மாதிரியாக தலைமைத்துவ பண்புடன் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் அரசுப் பொதுத் தேர்வில்100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு மாநில அளவிலான அரசுப் பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் ஐந்து  இடங்களுக்குள் வர அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இக் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், தேர்வுத் திட்ட அமைப்பாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here