அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகஅனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் ஆதார் எண், பெற்றோர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து இ,எம்.ஐ.எஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண் இல்லாத மாணவர்களை வட்டார வள மையத்துக்கு அழைத்து சென்று அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை உருவாக்கி, பதிவு செய்ததற்கான ரசீதை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும். 5 வயது முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு ஆதாரில்,புகைப்படம், கைரேகை புதிதாக பதிவு செய்ய வேண்டும். ஆதார் பதிவு செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் திருத்தம் மேற்கொள்ள ரூ. 50 வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.