புதுக்கோட்டை,ஆக.9; மாணவர்கள் தங்கள்  வீடுகளில் மரம் நட்டு பராமரிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் படைப்போம் பசுமைகிராமம் திட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது: ஓர் அரசுப் பள்ளி உயரவேண்டும் எனில் அக்கிராம பெற்றோர்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே முடியும் .இங்கு இப்பள்ளி உயர காரணம் இக்கிராம பெண்களாகிய உங்களது  ஒத்துழைப்பால் தான் .
இங்குள்ள குழந்தைகளிடம் நீங்கள் பிற்காலத்தில் என்னவாகப்போகிறீர்கள் என நான் கேட்கும் பொழுது கலெக்டர்,மருத்துவர் என மாணவர்கள் கூறுவதை கேட்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.எனவே இத்தகைய எண்ணம் கொண்ட குழந்தைகளின் எண்ணத்தை பெற்றோர்களாகிய நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்.உங்களால் தான் குழந்தைகளின்  எண்ணத்தை நிறைவேற்ற முடியும்.மேலும் பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.அதே போல் பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மரம் நட்டு பராமரிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

முன்னதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.பின்பு கல்விக்கு கைகொடுப்போம் திட்டத்தின் கீழ் வகுப்பில் அனைத்து திறன்களிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பணப்பத்திரங்களை வழங்கிப் பாராட்டினார்.முடிவில் சென்ற ஆண்டு மரக்கன்றுகளை பெற்று இந்தாண்டு சிறப்பாக வளர்த்த பெற்றோர்களின் பெயரை குலுக்கல் முறையில் 10 நபர்களை தேர்ந்தெடுத்து தங்க மூக்குத்தி வழங்கினார்.பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களிடமும் மரக்கன்றுகளை வழங்கி நன்றாக பராமரிக்க கேட்டுக் கொண்டார்.

விழாவில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன்,கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார்,புதுக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் அரு.பொன்னழகு,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ்,வட்டார வளமைய பயிற்றுநர் எஸ்.பத்மாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.பள்ளித் தலைமையாசிரியை அ.கிறிஸ்டி நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரா.சுஜாமெர்லின்,லூ.எஸ்தர்கிறிஸ்டியானா ஆகியோர் செய்திருந்தனர்.

கல்விக்கு கைகொடுப்பம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பணப்பத்திரம் ரூ42 ஆயிரத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜஸ்டின் திரவியம்,பிரியாஜஸ்டியன் தம்பதியினர் வழங் கியது குறிப்பிடத்தக்கது.