தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக்குகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட தேர்வு விவகாரத்தில் வினாத்தாளில் முறைகேடு செய்து 196 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறி பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவு சரி தான் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால் இதையடுத்து இதே கோரிக்கை தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மிண்டும் விசாரிக்கப்பட்டது. அதில், 196 பேர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசாணை செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருவேறு தீர்ப்புகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவில்,” பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது.

இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து, பணி நியமனம் வழங்க வேண்டும். இதில் மதுரை கிளை உத்தரவு என்பது சரியானதே என்று உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பான நடைமுறைகளை கடந்த ஏப்ரல் 30க்குள் முடிக்க வேண்டும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் பாலிடெக்னிக் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விவகாரத்தை பொறுத்தமட்டில் அனைத்து முறைகேடுகளையும் தீர ஆய்வு செய்த பின்னர் தான் அதனை ரத்து செய்து மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் தேர்வை மீண்டும் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் இதில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வாதத்தில்,” பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் தான் தேர்வை ரத்து செய்தோம். மேலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. குறிப்பாக 29 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்றம் அவற்றை கருத்தில் கொள்ளாமல் தேர்வு ரத்து செய்தது செல்லாது என  உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பு வாதத்தில்,”தேர்வு முடிந்தவுடன் ரத்து செய்யப்படவில்லை.

இதில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பின்னரே ரத்து செய்யப்பட்டது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்த ஒட்டு மொத்த தேர்வையும் ரத்து செய்வது என்பது கூடாது. இதனால் விரிவுரையாளர்களின் எதிர்காலம் பாதிப்படையும் என வாதிடப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டதாக கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 31ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா கடந்த 8-ம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில்,”பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த அரசாணை செல்லும். இதில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது ரத்து செய்யப்படுகிறது. மேலும் மறுதேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசே முடிவை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றச் சிக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.