கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
*5 மற்றும் 8-ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு:*
நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில், தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 5 மற்றும் 8ம் வகுப்பில் தோல்வியுற்றால் 3 ஆண்டுகளுக்கு மாணவர்கள் தங்களது அடுத்த வகுப்பை தொடரலாம் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.
*தமிழகத்தில் கல்வி:*
தமிழகத்தில் தற்போதைய கல்வித்தரம் குறித்து பார்த்தால், எழுத்தறிவு விகிதம் 80.33 ஆக உள்ளது. இதில், ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.77ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.44 ஆகவும் இருக்கிறது. தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 1500க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2500க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையில் அதிக மாணவர்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையும், உயர்கல்வி படிப்பவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் என்ற பெருமைகளையும் தமிழகம் பெற்றுள்ளது.
*கல்விப் பணியில் தலைவர்கள்:*
தமிழகத்தில் கல்வித்துறையில் அசாத்திய மாற்றங்களை கொண்டுவந்ததில் எம்.ஜி.ஆர், காமராஜர் உள்ளிட்டோருக்கு முக்கியப் பங்கு உண்டு. அதிக பள்ளிக்கூடங்கள் கட்டியதும், அதிகக் குழந்தைகள் பள்ளிக்கு வரவழைத்ததும் காமராஜர் தான். அந்தக் காலத்தில் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டதாலேயே, தற்போது தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது.
மேலும், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க இலவச மதிய உணவு, சீருடை, புத்தகங்கள் என காமராஜர் காலத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலத்திலும் கூட மாணவர்கள் 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்; மேல்நிலைப்பள்ளியை தொடர வேண்டும் என்று இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, கல்வி உதவித்தொகை என அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கு வருபவர்கள் அதிகம் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
*மாணவர்களுக்கு தேர்வின் மீதுள்ள ஆர்வம் குறைந்ததா?*
மாணவர்களின் நிலையைப் பற்றி ஆராய்ந்தால், முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் இருந்தன. கடந்த 2017-18ம் கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதுவே மாணவர்களுக்கு ஒரு பெரும் சுமையாக இருந்து வருகிறது. அதாவது, 10 மற்றும் 12ம் வகுப்பு எனும் போது இடையில் ஒரு வருடம் இடைவெளி இருக்கும். பொதுத்தேர்வு என்றாலே மாணவர்கள் பதற்றமாகும் சூழ்நிலையில், ஒரு வருடம் மாணவர்களை மன ரீதியாக அவர்களை சரிசெய்ய உதவியாக இருந்தது.
தற்போது 3 வருடங்களும் தொடர்ச்சியாக பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதையோடு, பொதுத் தேர்வை ஆர்வமாக எதிர்கொள்ளும் மாணவர்கள் கூட சோர்ந்து விட அதிக வாய்ப்பிருக்கிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, மாணவர்களிடையே தேர்ச்சி விகிதம் மற்றும் அவர்களுக்கு தேர்வின் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களிடையே ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 10 வயதில் ஒரு சாதாரண மாணவன் பொதுத்தேர்வு என்றால் என்ன? என்பதை உணர வேண்டும். அந்தத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். பொதுவாக அந்த வயதில் மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார். ஆனால், சில இடங்களில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் வெளிப்படுத்த தயக்கம் இருக்கும். சிலர் புரிந்துகொள்வதற்கு நேரம் எடுத்துக்கொல்லும். 5ம் வகுப்புக்கு மேல் தான் சில குழந்தைகள் அடிப்படைக் கல்வியையே கற்றுக்கொள்வதாக சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வில் விடை தெரியாமல் முழிக்கும் அதே குழந்தையிடம் சற்று நேரத்திற்கு பின்னர் அதற்கான பதிலை அந்தக் குழந்தையால் சொல்ல முடியும். தேர்வு பயத்தில் மறந்து விட்டது என்று கூறுவார்கள். அப்படி இருக்க 10 வயதில் பொதுத் தேர்வு என்றால் எப்படி சாத்தியமாகும்? ஆக, இந்த இடத்தில் தேர்வு என்பது முக்கியமல்ல. மாறாக, குழந்தையின் கல்வியறிவு என்ன நிலையில் இருக்கிறது என்று அந்த வகுப்பு ஆசிரியர் தெரிந்துகொண்டாலே போதும்.
*மற்ற கலைகள் அழிந்துவிடும் அபாயம்:*
10 வயதில் குழந்தைகளுக்கு நடனம், இசை, தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். அனைத்து அடிப்படை அறிவுகளையும் வழங்க வேண்டும் வயதில், 5ம் வகுப்பிலே படிப்பு, தேர்வு என்று இருந்தால் அந்த குழந்தைக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்று தெரியாமலே போய்விடும். மற்ற கலைகளையும் தெரிந்துகொள்ளாத சூழ்நிலை ஏற்படும்.
அனைத்து மாணவர்களும் படிப்பு என்று இறங்கிவிட்டால் மற்ற துறைகளில் ஜொலிக்கப் போகிறவர்கள் யார்? என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. 5ம் வகுப்பில் தேர்வு வைக்கும்பட்சத்தில் சனி, ஞாயிறுக் கிழமை உள்பட அந்தக் குழந்தை பள்ளியில் தான் இருக்க நேரிடும். பொதுத் தேர்வுகளின் மூலம் மாணவர்களின் திறமைகளை வளர்க்க முடியாது. இது மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ, அரசு புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
*செயல்வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம்:*
பள்ளிகளில் எழுத்துத் தேர்வுக்கு பதிலாக செயல்வழிக் கற்றல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மட்டுமே மாணவரின் ஆற்றல் அதிகரிக்கும். 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத்து வடிவில் வைப்பதற்கு பதிலாக செய்முறைத்தேர்வு வைக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் நிலையை அறிந்துகொண்டு, அடுத்த வகுப்புகளில் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்கலாம்.
ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து எழுதுவது என்பது அனைத்து மாணவர்களாலும் செய்ய முடியாத ஒரு காரியம். ஆனால், செய்முறைத்தேர்வு, திறனறித் தேர்வு வைக்கும்போது அனைத்து மாணவர்களும் எளிதாக கல்வியறிவை பெற முடியும். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருப்பார்கள் என்றால் அனைவருமே ஒரே I.Q லெவலில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா?
*கல்வியறிவு விகிதம் குறையுமா?*
ஆசிரியர்கள், தேர்வு என்ற கோணத்தில் பாடம் எடுப்பதற்கும், அறிவை வளர்க்கும் விதத்தில் பாடம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், சிறு வயதிலே தேர்வை திணிக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு ஏற்படும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அதற்கு பயந்துகொண்டே மாணவர்கள் சிலர் படிப்பை நிறுத்தி விடுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், 5ம் வகுப்பு என்றால் மாணவர்களின் மனதில் பொதுத்தேர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தத் தானே செய்யும்..
இதில் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர். முக்கியமாக கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும். ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் குறையும்.
*மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர்கள்:*
ஒரு மாணவர் 10ம் வகுப்பு படிக்கும் போது தேர்வு என்றால் என்ன? பாடத்தை புரிந்துகொண்டு தேர்வு எழுதுவது எப்படி? அதே நேரத்தில் 10 வயதிலே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற ஒன்றை திணிக்கும் போது மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களின் நிலை என்ன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த அறிவிப்பினை அடுத்து 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள வைப்பது? என மற்றவர்களிடம் ஆலோசனை செய்து வருகின்றனராம்.
இனி, 5ம் வகுப்பு தேர்வு எழுதிய குழந்தை கூட அண்டை வீட்டாரிடம் இருந்தும், சற்று விலகியே இருக்கும். 5ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் என்னவென்று தெரிந்து அதுகுறித்து உறவினர்கள் கேள்வி எழுப்புவார்கள் அல்லவா?
*ஆசிரியர்கள் பற்றாக்குறை:*
தமிழகத்தில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்தச் சூழலில் எப்படி ஒரு மாணவர் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியும். அதேபோன்று செய்முறைத்தேர்வுக்கான ஆய்வகங்களும் அரசுப்பள்ளிகளில் குறைவாகவே இருக்கின்றன. மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, வகுப்பில் தேவையான பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதன் பின்னர், பொதுத்தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதே சிறந்த வழியாக இருக்கும்.
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வினால் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்று தமிழக அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். 5ம் வகுப்பு அரசுப்பள்ளியில் ஆசிரியரே இல்லை என்றால் எப்படி மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும்? என்பதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கல்வியறிவில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டில், 10 வயது மேல் தான் அடிப்படைக் கல்வியையே கற்றுக்கொடுக்கின்றனர். செய்முறைத் தேர்வுக்கு முக்கியவத்தும் அளிக்கப்படுவதோடு தேர்வு முறைகளும் எளிதாக இருக்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்விமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவே வெளிநாட்டுப் பயணம் என்று கூறும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் பின்லாந்து நாட்டிற்குச் சென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கல்வியாளர்கள் பலர் கூறுவது போல 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளுக்கு கோச்சிங் செண்டர்கள் அதிகரித்துள்ளது போல இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளும் டியூஷன் சென்டர்கள் அதிகரிக்கும். கல்வி வியாபாரம் ஆவதை நம்மால் முழுமையாக தடுக்க முடியாது. ஆனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதனைத் தடுக்கலாமே?
*நன்றி : தினமணி*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..