தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு("டைரி') வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.

கடந்த கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், நினைவாற்றலையும் வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் கல்வி கற்கும் சூழல் அமையும் வகையில் தற்போது தேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு நாள்குறிப்பேடு வழங்கப்படும். மாணவர்களின் அன்றாட வகுப்பறை நடவடிக்கை, கற்றல் குறித்த தகவல்கள், செயல்பாடு போன்றவை குறித்து பெற்றோருக்கு ஆசிரியர்கள் தெரியப்படுத்தும் விதமாக நாள்குறிப்பேடில் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும், பெற்றோரும் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் நாள்குறிப்பேடில் எழுதி உள்ள தகவல்களை தினமும் பார்க்க அறிவுறுத்தப்படுவர். மாணவர் ஒருவர் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் நாள்குறிப்பேடில் எழுதி அனுப்ப வேண்டும். விலையில்லா நாள்குறிப்பேடு மூலம் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி பாலமாக அமைய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 55 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுவர்.

இந்த நாள்குறிப்பேடில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். முதல் 2 பக்கங்கள் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து எழுத கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில், மாணவர்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை எழுத வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாள்குறிப்பேடு அச்சிடப்படும். இதை தினமும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Telegram Group Link -Click Here