உலகின் சிறந்த ஆசிரியர் விருது (Global Teacher Prize) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நோபல் பரிசுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை விட, இப்பரிசுக்கு கொடுக்கப்படும் தொகை அதிகம். இந்த விருதை உருவாக்கியவர் ஓர் இந்தியர். ஆச்சர்யமாக இருக்கிறதா? விரிவாக எழுதியிருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்!

இந்த விருதை நீங்கள் வென்றால், உங்களுக்கு பரிசுத்தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பில் 7.10 கோடி) பரிசாக வழங்கப்படும். நோபல் பரிசுத்தொகையின் மதிப்பு 6.50 கோடி.

இனி இந்த உலகின் சிறந்த ஆசிரியர் விருதைப் பற்றி பார்க்கலாம்.

லண்டனில் உள்ள வர்க்கி பவுண்டேஷன் எனும் அறக்கட்டளை, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், ‘Global Teacher Prize’ என்ற விருதை, ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

இந்த உலகில் வறுமையில் உள்ள, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, கடந்த 2012-ஆம் ஆண்டு துவக்கப்பட்டதுதான் இந்த வர்க்கி பவுண்டேஷன். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளை, இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்னவெனில், உலகில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் நல்லதொரு ஆசிரியர் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.

இதன் தலைவர் சன்னி வர்க்கி என்பவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். துபாயில் தனியார் பள்ளிகளை நடத்தி வருபவர். பல்வேறு நாடுகளில் இவரது பள்ளிகளுக்கு கிளைகள் இருக்கின்றன. பள்ளி கல்வியில், உலக அளவில் அறியப்படும் நபர் இவர். யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார். இவர்தான் இந்த உலகளாவிய ஆசிரியர் விருதினை (நான்தான் 'உலகின் சிறந்த ஆசிரியர் விருது' என்று இதை சற்று மிகைப்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறேன். அவர்கள் Global teacher Prize என்றுதான் கொடுக்கிறார்கள். Global Best Teacher prize என்று கொடுக்கவில்லை) உருவாக்கியவர்.

மாணவர்களின் நலனைக் கொண்டு உருவாக்கப்பட்ட வர்க்கி பவுண்டேஷன், ஏன் ஆசிரியர்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்தது என்று கேட்டால், அதற்கு அந்த அறக்கட்டளை தந்த பதில் இதுதான். உலகில் உள்ள மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்காமல் போவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் இருந்தாலும், அர்ப்பணிப்பு மிக்க ஆகச்சிறந்த ஆசிரியர் ஒருவர் இருந்தால், இதை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு மாணவனுக்கு சிறந்த கல்வியை அளிக்க முடியும் என்றது. அதன்படி 2015-ஆம் ஆண்டில் இருந்து இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடையே அவர்களின் கல்வி, பொருளாதாரம், தனி நபர் ஒழுக்கம், சிறந்த தலைமைப் பண்பு, சிந்திக்கும் முறை ஆகியவற்றை தங்களின் புதுமையான கல்வி கற்பித்தல் முறையால் ஆசிரியர் வளர்த்திருக்க வேண்டும். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதுதான் இந்த விருதைப் பெறுவதற்கான முதல் தகுதி. அந்த பள்ளியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

2018-ஆம் ஆண்டு இந்த விருதை வென்றவர் பெயர் ஆண்ட்ரியா ஸபீராகவ் (Andria Zafirakou).  மேற்கு லண்டன், பிரென்ட் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஆல்பெர்ட்டன் கம்யூனிட்டி பள்ளியின், கலைப்பயிற்சி (ஆர்ட் அண்ட் டெக்ஸ்டைல்) ஆசிரியை இவர்.

2018-ல், 173 நாடுகளில் இருந்து மூன்றரை லட்சம் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் இருந்து தேர்வுக்குழு 50 பேரை தேர்வு செய்யும். பின்னர் இதிலிருந்து இறுதிப்போட்டிக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பத்து ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு, அவர்களில் ஒருவரை, அந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து, பரிசு கொடுத்து கௌரவிப்பர்.

சென்ற ஆண்டு சிறந்த 10 ஆசிரியர்களின் பட்டியலில் துருக்கி, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரேசில், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இடம்பிடித்திருந்தனர். இதில்தான் ஆண்ட்ரியா தேர்வு செய்யப்பட்டார்.

அப்படி என்னதான் ஆண்ட்ரியா செய்துவிட்டார்?

இப்பள்ளியில் படிக்க வரும் மாணவர்கள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 35 விதமான மொழிகளைப் பேசும் மாணவர்கள் என்றால் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு படிக்கும் 85 சதவீத மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

வறுமையின் காரணமாக, திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி என்று தினந்தோறும் அரங்கேறும் பகுதி அது. அதுமட்டுமின்றி, ரவுடிக்கும்பலின் அட்டகாசமும் பள்ளி இருக்கும் பகுதியில் நடந்துகொண்டே இருக்கும். இதை எல்லாவற்றையும் சமாளித்து, அந்த மாணவர்களுக்கு கல்வியைக் கற்பித்தது மட்டுமின்றி, தன்னம்பிக்கை, தற்காப்பு பயிற்சி, குழு ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து, மேற்கு லண்டனில் சிறந்த பள்ளி என்றும், சிறந்த மாணவர்கள் என்றும் பெயரெடுக்க வைத்திருக்கிறார் இந்த ஆசிரியை.

மாணவர்கள் ரவுடி கும்பலிடமிருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளியில் பாக்சிங் பயிற்சி அளித்து வருகிறார். எம்பிராய்டரி, பெயிண்டிங், பொம்மை உருவாக்குதல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை, அம்மாணவர்களிடையே மட்டுமின்றி, அப்பள்ளி ஆசிரியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, கல்விப்பணியை திறம்பட ஆற்றச் செய்திருக்கிறார்.

பள்ளி முடிந்து மாணவர்கள் ரவுடி கும்பலிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்பகுதி போலீஸாருடன் இணைந்து, தினமும் மாணவர்களை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பார்.  "இது எனது பள்ளி அல்ல. எனது வீடு. இங்குள்ள 1400 மாணவர்களும் எனது குழந்தைகள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகளைக் கொண்ட வைரங்கள். அவர்கள் சுடர்விட்டு பிரகாசிக்கப் பிறந்தவர்கள்” என்று நெகிழ்ச்சியோடு பேசுகிறார் ஆண்ட்ரியா.

இந்த ஆண்டுக்கான விருதுப்பட்டியில் குஜாராத்தை சேர்ந்த ஆசிரியை உள்பட பத்து பேர் (https://www.globalteacherprize.org/finalists/2019-finalists/) இடம்பெற்றிருந்தனர்.  இறுதியாக இப்பரிசை தட்டிச்சென்றவர் ஒரு ஆப்ரிக்கர். கென்யாவைச் சேர்ந்த பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியரான பீட்டர் டபிச்சி (Peter Tabichi). தனது ஊதியத்தில் 80 சதவீத தொகையை மாணவர்களுக்காகவே செலவிடுபவர் இவர்.

கென்யாவின் ஆற்றோரப்பகுதியில் உள்ள பனி (pwani) கிராமப்பகுதியில் உள்ள பள்ளியில் ஓர் ஆசிரியருக்கு 58 மாணவர்கள். இங்குள்ள 95 சதவீத மாணவர்கள் வறுமையில் உழல்பவர்கள். மூன்றில் ஒரு மாணவர், ஆதரவற்றவராகவோ அல்லது ஒரு பெற்றோர் (அம்மா அல்லது அப்பா) மட்டும் இருக்கும் மாணவராகவோ இருப்பார்கள். பலருக்கும் உணவு இல்லை. போதை பழக்கம், சிறுவயதிலேயே கர்ப்பமாதல், சிறு வயதிலேயே திருமணம், இடைநிற்றல், தற்கொலைகள் என அதிகம் உள்ள பள்ளி இது. பள்ளிக்கு தினமும் மாணவர்கள் 7 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும். மழைக்காலமெனில் அதுவும் முடியாது.

பீட்டர் ஒவ்வொன்றாக மாற்றினார். பள்ளி மாணவர்களுக்காக திறமையாளர் குழுவொன்றை அமைத்து, அறிவியல் துறையில் அவர்களது கவனத்தை திருப்பினார். இன்று அப்பள்ளியில் உள்ள 60 சதவீத மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்துகின்றனர். கென்யாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் கண்காட்சியில் இவருடைய மாணவர்கள் பார்வையற்ற, காதுகேளாதோருக்கான கருவி ஒன்றை காட்சிப்படுத்தி அசத்தியது. கணிதக் குழு மாணவர்கள் அரிசோனாவில் நடக்கும் சர்வதேச கணிதப்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.

பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இவரும் இவரது சக ஆசிரியர்களும் இணைந்து ஒன் டூ ஒன் முறையில் கற்பித்தலை நிகழ்த்தியுள்ளனர்.  ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்து, ICT முறையில் வகுப்பில் 80 சதவீத பாடங்களை நடத்தி மாணவர்களை ஈர்த்துள்ளார். மனிதர் இதற்காக ஆன்லைன் சென்டர்களுக்கு தேடிச்சென்று, கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை, தகவல்களை தரவிறக்கம் செய்து, பின்னர் பள்ளியில் கொண்டு வந்து மாணவர்களுக்கு போட்டுக்காட்டுவார். மூன்று ஆண்டுகளில் பள்ளியில் மாணவர் சேர்க்கையை இரு மடங்காக உயர்த்தியிருக்கிறார். மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

இத்தகைய காரணங்களால்தான் 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆசிரியர் விருது இவருக்கு, எக்ஸ் மேன் பட நாயகனான ஹியூக் ஜாக்மேன் கையால் வாங்க வைத்திருக்கிறது.

அட நம்ம தமிழ்நாட்டிலும் இத்தகைய ஆசிரிய பெருமக்கள் இருக்கிறீர்களே... நீங்களும் விண்ணப்பிக்கலாமே...

விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. சனி, ஞாயிறு விடுமுறையை இதற்காக பயன்படுத்திக்கொள்ளுங்களேன். ஒரு தமிழ் ஆசிரியர் இந்த விருதை வென்றாலும், நானே இந்த விருதைப் பெற்றது போல் பெருமகிழ்ச்சி கொள்வேன்.

https://www.globalteacherprize.org/finalists/2019-finalists/

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2019

(விருது வழங்கப்படும் தேதி: 23.3.2020 ஆக இருக்கலாம்)

விவரங்களுக்கு: https://www.globalteacherprize.org

அன்புடன்

மோ.கணேசன், பத்திரிகையாளர்.


Join Telegram Group Link -Click Here