மகப்பேறு நலச்சட்டத்தின்படி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பேராசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்று, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசு முடிவு செய்து அதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், கேரள அரசின் இந்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, கேரளாவில் அரசு ஊழியர்கள் மட்டுமில்லாது தனியார் பள்ளி ஆசிரியைகள், தனியார் கல்லூரி பேராசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவன அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் நடைமுறை இந்தியாவிலே முதல் முறையாக கேரள மாநிலத்தில் தான் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.Join Telegram Group Link -Click Here