அன்னவாசல்,நவ.13: குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்  அன்றைய தினம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இரவு செல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆப் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது குறித்து பெற்றோருக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு பெற்றோர் கூட்டம் அன்னவாசல் அருகேயுள்ள உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.கிராம கல்விக்குழுத் தலைவர்  கருப்பையா முன்னிலை வகித்தார்.

உருவம்பட்டி பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.சாந்தி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழக பள்ளிக் கல்வித்துறை மீண்டும் இணைவோம் என்ற குறிக்கோளுடன் குழந்தைகள் தினத்தன்று பெற்றோருக்கான ஹோம் ஒர்க் கொடுத்துள்ளது.இதன்படி அன்றைய தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் பெற்றோர் தங்களது செல்போன்,தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அனைத்து வைத்து விட்டு தங்களது பிள்ளைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டும்,சிரித்து மகிழ்ந்து பாட்டு,நடனம் மற்றும் விளையாண்டு கழிக்க வேண்டும்.மாணவர்களும் அந்த நேரத்தை பெற்றோருடன் மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும்.இந்நிகழ்வு வாரம் தோறும் நடைபெற வேண்டும்.முடிந்தால் தினமும் 30 நிமிடமாவது  பெற்றோரும் பிள்ளைகளும் செலவு செய்ய வேண்டும்.இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன்,நம்பிக்கையுடன் இருப்பதுடன் பெற்றோர் குழந்தைகள் இடையே வலுவான உறவு உண்டாகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தினமும் இரவு 7.30 மணி  முதல் 8.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் செல்போன்,தொலைக்காட்சி மற்றும் மின்னணு சாதனங்களை சுவீட்ச் ஆப் செய்து விட்டு அந்த நேரத்தை மகிழ்வோடு செலவிடுவோம் என உறுதிமொழியேற்றனர்.
  
முன்னதாக நேருவின் புகைப்படத்திற்கு பெற்றோர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் குழந்தைகள் தின கேக் வெட்டி அதனை மாணவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தும் ,குழந்தைகளோடு நொண்டி அடித்து விளையாண்டும்,கதைகள் சொல்லி,பாட்டு பாடியும் மகிழ்ந்தனர்.முடிவில்  இதற்கான விழிப்புணர்வு துண்டுபிரசுரம் கிராமத்தில் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடைநிலை ஆசிரியர் கு.முனியசாமி செய்திருந்தார்.