திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை இந்திரா வந்திருந்தார். இவர் இப்பள்ளியில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். அந்த பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர், தனக்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அப்போது 5 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு பணியிட மாறுதல் வழங்க மறுத்ததால், திடீரென கலந்தாய்வு நடந்த அறையின் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்திய பின் தர்ணாவை கைவிட்டார்.

நெல்லையில் ஆசிரியர்கள் தர்ணா: நெல்லையில் 5 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்படமாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். பிற ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி கூறுைகயில், நெல்லை மாவட்டத்தில் வீரளபெருஞ்செல்வி என்ற கிராமத்தில் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். இதுபோல் ராஜகோபாலபுரத்தில் 4 மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளி உள்ளது. இங்கும் ஒரு ஆசிரியர் பணியில் உள்ளார். எனவே அங்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வாய்ப்பில்லை. கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் இடையூறு செய்யும் வகையில் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று எச்சரித்து அனுப்பினார்.