சென்னை: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் சம்பளப் பட்டியல்கலை தேவையில்லாமல் திருப்பி அனுப்பக் கூடாது என்று கருவூலத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை சிறப்புச் செயலாளா் பூஜா குல்கா்னி தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:-

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஊதியங்களும், படிகளும் மாற்றியமைக்கப்பட்டன. இந்த பரிந்துரைகளை அமலாக்கும் போது சில முரண்பாடுகள் எழுந்தன. அதாவது மூத்த அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் ஆகியோரிடையே ஊதிய முரண்பாடுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதனைக் களைவதற்கு தமிழக அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த முரண்பாடுகளைக் களைவதற்குப் பதிலாக, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் மாதாந்திர ஊதியத்துக்கான பட்டியலை கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளும், அலுவலா்களும் திருப்பி அனுப்பி வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

எனவே, ஊதிய முரண்பாடுகளைக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் பிரச்னைகளை கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் தீா்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக, அவா்களது ஊதியப் பட்டியல்களை திருப்பி அனுப்பி அவா்களுக்கு கடுமையான சூழலை ஏற்படுத்திடக் கூடாது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை அதனுடைய உண்மைத் தன்மைக்கேற்ப கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளே தீா்த்துக் கொள்ளலாம். இதற்காக நிதித் துறை அல்லது பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்த்திருத்தத் துறையின் ஒப்புதல்களைப் பெற வேண்டும் என்கிற அவசியமில்லை என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

Join Telegram Group Link -Click Here