மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை திட்ட ஏற்பளிப்பு குழு சார்பில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில்நாட்டம் அறிதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு  பள்ளிகளில் பயிலும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு தேர்வை ஆன்லைனில் நடத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் 2019-20ம் கல்வியாண்டு அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 9  மற்றும் 10ம் வகுப்புமாணவர்களுக்கு ‘நாட்டமறி தேர்வு’ (Aptitude Test) என்ற பெயரில் இந்த தேர்வை நடத்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில் தமிழக கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் 8 லட்சத்து 45 ஆயிரத்து 218 மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் பள்ளி வாரியாக பயன்பாட்டிலும், இணையதள வசதியுடனும் உள்ள கணினிகளை தேர்வு  செய்து இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக பழுதுடைந்துள்ள கணினிகளை சரி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை இப்போதே வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு 20 மாணவர்களுக்கு ஒரு கணினி ஆசிரியர்  என்ற கணக்கின்படி அல்லது கணினி பயன்பாட்டில் திறமை அனுபவம் உள்ள ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் தேர்வை அனைத்து குழு உறுப்பினர்களும் பகுதி வாரியாக சென்று கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இணையதளத்தில் நாட்டமறி தேர்வுக்கான பயிற்சி  வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வுக்குமுன்பாக வினாக்களின் வகைகளை அறிமுகம் செய்து அவை சார்ந்த முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்,  நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வு நேரத்திற்கு மேல் விடையளிக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும்போது வினாத்தாள் வேறுபடும். இது மதிப்பெண் அடிப்படையாக  கொண்ட தேர்வு அல்ல. இது ஒரு தன்னிலை திறன் அறியும் பயிற்சி ஆகும்.மாணவர்களுக்கு தேர்வின்போது வழங்கப்படும் வினாக்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருக்கும்.

அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வின்போது சக மாணவருடன் விவாதம் செய்ய கூடாது என்பதுஉள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எத்தகைய துறையில் மாணவர்களுக்கு நாட்டம் உள்ளது என்பதை கண்டறிவதற்காக பயன்படும் தேர்வு இது ஆகும். அதற்கேற்ப மேற்படிப்பை தேர்வு செய்வது இந்த பயிற்சி  வழிகாட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் பதிவு செய்யப்படுவதால் மாணவர்களின் தேர்ச்சி விபரங்களை மையமாக வைத்து அவர்களின் எதிர்கால கல்வி தீர்மானிக்கப்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் எந்த துறையிலும் ஆர்வம் இல்லாத நிலை தேர்வு முடிவில் தெரியவந்தால் தேர்வில் சிறப்பிடம் பெறாத மாணவர்கள் மேற்படிப்பு கேள்விக்குறியாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.