தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.புதுடெல்லி: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை விரைவில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறைகளை முறையாக பின்பற்றவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விடுபட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே சமயம், விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இவ்வாறு துண்டு துண்டாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வேட்பு மனு தொடக்கம் எப்போது ?

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி

*தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று (6ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது.

*இந்த நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் 6 மாவட்டங்களின் வாக்காளர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

*இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

*அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.

*இதையடுத்து உணவு நேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதாவது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து விட்டு, மீதம் உள்ளவைகளுக்கு தேர்தல் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை என குறிப்பிடப்பட்டது.

*இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் அது குறித்து நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.