கோட்டூர் அருகேயுள்ள பனையூர் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் தந்தை இழந்த பெண் குழந்தைக்குச் அஞ்சலக செல்வ மகள் பாதுகாப்பு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மகிழ்வித்து மகிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணி கணேசன் முயற்சியால் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரத் அவர்களிடம் இதற்கான நிதியுதவி பெற்று முதற்கட்டமாக தலா ரூபாய் ஆயிரத்தை ஐந்தாம் வகுப்பு மாணவி காயத்ரிக்கு சுகன்யா சம்ருதி திட்டத்தில் முதலீடு செய்து அதற்குரிய அஞ்சலக் கணக்குப் புத்தகத்தை மாணவியின் பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இத்திட்டமானது பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்றாகும். இதன் முதிர்வு தன் தொகையினை அப்பெண் குழந்தை தன் பதினெட்டாவது வயதிற்கு மேல் படிப்பிற்கும் அல்லது திருமணத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் பெற்றோரால் சேமிக்கப்படும் சிறு தொகையைத் தொடர்ந்து இதில் முதலீடு செய்துவர தக்க அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியை சியாமளா செய்திருந்தார்.