சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் சாதனைகளுக்கு வழிவகுக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மாணவர்களிடையே ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
வழக்கமாக பாடங்கள், வகுப்புகளைப் பொறுத்து ஒவ்வொரு நாடுகளிலும் வகுப்பறைகளின் அளவுகள் வேறுபடுகிறது. மேலும், சிறிய வகுப்பறைகள் இருக்கும்பட்சத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை எளிதாக கையாள முடியும். இதனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஆனால், பள்ளிகளில் சிறிய அளவிலான வகுப்பறைகளை மாணவர்கள் விரும்புவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
1995 முதல் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், கணிதம் மற்றும் அறிவியலில் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த நான்காம் வகுப்பு (வயது 9-10) மற்றும் எட்டாம் வகுப்பு (வயது 13-14) மாணவர்களின் செயல்திறன் மற்றும் சாதனைகள் கண்காணிக்கப்பட்டது.
இதில், கடந்த 2003, 2007 மற்றும் 2011-இல் சேகரிக்கப்பட்ட நான்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, லித்துவேனியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியாவின் எட்டாம் வகுப்பு மாணவர்களின் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நான்கு நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான வகுப்புகள் இருந்தன. மொத்தம் 151 பள்ளிகளில் 231 வகுப்புகளில் இருந்து 4,277 மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் மற்றும் புவி அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில் சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களின் செயல்திறனை பாதிக்கின்றன. அதே நேரத்தில் மிகப்பெரிய விலாசமான வகுப்பறைகளில் பயிலும் மாணவர்கள் எளிதாக கற்றுக்கொள்வதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.