விராலிமலை, டிச.19: மாணவர்கள் நன்றாக படித்து  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் போல் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா.சின்னத்தம்பி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஐம்பெரும்விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு அடல் டிங்கரிங் லேப்பினை  ( அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகம்)திறந்து வைத்து மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா.சின்னத்தம்பி பேசியதாவது:இந்திய அளவில் பார்க்கிற போது தமிழகத்தில் தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் பொழுது நம் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.நல்ல ஆசிரியர்கள் இருந்தால் தான் நல்ல மாணவர்களை உருவாக்கமுடியும்..மாணவர்கள் பள்ளியில் படிக்கும் பொழுதே நல்ல கல்வி,நல்ல ஆராய்ச்சித் திறமையை    கற்றுக் கொள்ள வேண்டும்.கிராமப் புறத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டாக்டர்களாக,பொறியாளர்களாக ,அறிவியல் அறிஞர்களாக வர வேண்டும் என நினைத்து உங்களை  பள்ளிக்கு அனுப்புகிறார்கள். எனவே மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.உங்களுடைய எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.மேலும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் போல் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது:கல்வித்துறையில் உலக அளவில் ஒரு பெரியமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த அடல் டிங்கரிங் லேப் தொடங்கப்பட்டுள்ளது.இந்த லேப்பில் உங்களது வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓர் வழிகாட்டி ஆசிரியர் இருப்பார்.அவர்கள் உங்களுக்கு கற்றலை செயல்முறையாக போதித்து உங்களுக்குள் உள்ள திறனை வெளிக் கொணர்வார்கள்.எனவே ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்கள் தங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பெருமையினை உலக அளவில் பறைசாற்றவேண்டும்.இந்த லேப்பில் 3 டி பிரிண்டர்கள்,ரோபோடிக்‌ஸ்,எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் மற்றும் சென்சார்கள் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய கருவிகள் உள்ளன  அதனை பயன்படுத்தி  தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் ஒரு மாணவன் தான் எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ள மாணவனாக உள்ளானோ அந்த துறையில் தனது திறமையை வளர்த்துக் கொண்டும்.இப்பள்ளியில் படிப்பவர்கள் பிற்காலத்தில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.மாணவர்கள் தங்களது திறமைகளை தேடி தேடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.தாங்கள் பயின்ற பள்ளிக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்திட வேண்டும்.ஆங்கில வழி பள்ளிகள் அரசுப் பள்ளிகளை திரும்பி பார்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா.சின்னத்தம்பி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.பின்னர் பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலவேம்பு கசாயத்தை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த கபாடிவீரர்கள் ,ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்கள்.முடிவில் 1330 குறட்பாக்களையும் தவறில்லாமல் ஒப்புவிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீ தேவியை பாராட்டி ரூ 2 ஆயிரத்தை மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் இரா.சின்னத்ம்பி வழங்கினார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் இலுப்பூர் மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இரா.காளமேகம்,விராலிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் சிறப்பாசிரியர் வேதமுத்து நன்றி கூறினார்.