ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வியின் தரம் இந்தியாவில் குறைந்துகொண்டே வருவதாகவும் அசர் (The Annual Status of Education Report - ASER) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அசர் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி, நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் இந்த ஆண்டும் வீழ்ச்சி நிற்கவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டின் கல்வித் தரத்தைப் பொறுத்தவரையில் 2007-2008ஆம் ஆண்டின் கல்வித் தரத்தை விடக் குறைவாகவே உள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படியென்றால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது? கல்வி தரத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனக்குறைவாகச் செயல்படுகின்றனவா போன்ற பல கேள்விகளை இந்த அறிக்கை எழுப்புகிறது.

2012ஆம் ஆண்டு அன்றைய திட்ட கமிஷன்தான் முதன் முதலில் இந்தியக் கல்வித் தரத்தில் குறைபாடு உள்ளதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதை அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதற்குப் பின் மாணவர்களின் படிக்கும் ஆற்றல், அடிப்படை கணித ஆற்றல் போன்றவை குறித்து எந்த விதமான தகவலும் வெளிவரவில்லை.

குழந்தைகளின் படிக்கும் ஆற்றலையே கல்வியின் தரமாக இந்த ஆய்வு எடுத்துக் கொள்கிறது. இதன்படி 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வியின் தரம் 9 சதவீதம் குறைந்துள்ளது.

கவலை அளிக்கும் அரசுப் பள்ளிகள்

கல்வியின் தரத்தை பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளின் தரம் அதிகஅளவில் குறையவில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.

2008ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளின் தரம் 67.9 சதவீதமாக இருந்ததாகவும் தற்போது இது குறைந்து 65.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் 53 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளிகளின் தரம் தற்போது 44.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இதேபோல மேல்நிலைக்கல்வியின் தரமும் வெகுவாக குறைந்துள்ளது.2007-08 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தில் எட்டு பேருக்குப் படிக்கும் ஆற்றல் இருந்தது. இது தற்போது வெகுவாக குறைந்து ஆறு அல்லது ஏழு பேருக்குத் தான் படைப்பாற்றல் இருக்கிறது.

கணக்குப் போடும் ஆற்றலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்

கூட்டல் கழித்தல் வகுத்தல் போன்ற அடிப்படைக் கணித அறிவில் தமிழக மாணவர்களின் நிலை தொடர்ந்து வருத்தமளிப்பதாகவே இருந்துவருகிறது. 2008ஆம் ஆண்டு கணித அறிவில் தமிழகம் இந்திய அளவில் மிகவும் பின்தங்கியே இருந்தது. தமிழகத்தில் 100-இல் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கே வகுத்தல் கணக்குகளைச் செய்யமுடிந்தது. இந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது 100-இல் இருபது மாணவர்களால் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடிவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அசாம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாணவர்களைவிடத் தமிழக மாணவர்களின் கணக்காற்றல் குறைவாகவே உள்ளது.

இந்த தரம் ஏன் குறைவாகவே பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குறைவாகவே உள்ளது என்பதைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டாயம் ஆய்வு ஒன்றை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எதை நோக்கிச் சொல்கிறது நம் கல்விக் கொள்கை?

முன்பை காட்டிலும் மாணவர்களின் வருகை நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் கல்வி வளர்ச்சி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? நம் கல்வியின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்ல வேண்டும்? அனைவருக்கும் கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் முன்னேறாமல் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்போது பயணிக்கப்போகிறோம்?. இது போன்ற பல கடுமையான கேள்விகளை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் கடினமானவை. குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இது சரியானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், பாடச் சுமையை குறைப்பது என்ற பெயரில் கல்வித் தரத்தைக் குறைப்பது எப்படித் தீர்வாகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏன் நாடு முழுவதிலும் அரசு முன்னெடுத்து செல்லவில்லை?. இந்த கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளில் கல்வித்தரம் நன்கு வளர்ந்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக ASER அந்த நாடுகளில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நமது கல்வி நிறுவனங்கள் எப்போது கண்டுகொள்ளுமோ?


Join Telegram& Whats App Group Link -Click Here