சென்னை: ஏற்கனவே அறிவித்திருந்த 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழந்தை பருவத்திலேயே தேர்வு பயமும், மன அழுத்தமும் ஏற்பட்டு விடும் என, பெற்றோர்களும் அச்சத்தில் இருந்தனர்.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அதனை பரிசீலித்து அரசாணையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய முறையிலேயே தேர்வு நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது