கொரோனா அச்சம் காரணமாக மத்திய அமைச்சகங்களில் பல்வேறு துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பயோ மெட்ரிக் முறை பதிவுக்கு பதில் பதிவேடுகளில் வருகையை கையெழுத்து மூலம் பதிவு செய்ய மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரங்களில் விரல்களை பதிவது மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் அலுவல் பணிகளுக்கு தேவையானவர்களைத் தவிர பிற பார்வையாளர்களை நாடாளுமன்ற வளாகத்திற்கு வரவழைப்பதை தவிர்க்குமாறு எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைகள் மற்றும் சுவாசம் தொடர்பான பொது சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here