ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேமிப்புக் கணக்குகளுக்கான சராசரி மாத நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்கிறது!!

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) புதன்கிழமை (மார்ச்-11) வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் தொந்தரவில்லாத வங்கி அனுபவத்தை அளிப்பதற்காக அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் சராசரி மாத இருப்பு (AMB) பராமரிப்பை நிறுத்தியது. இந்த முயற்சி அனைத்து 44.51 கோடி SBI சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் பயனளிக்கும் என்று SBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (SBI) சுமாராக 44.51 கோடி சேமிப்பு கணக்குகள் (Savings Bank Account) இருக்கிறதாம். இந்த சேமிப்பு கணக்குகள் மெட்ரோ நகரங்களில் இருக்கிறதா, நகரங்களில் இருக்கிறதா, கிராம புறங்களில் இருக்கிறதா என்பதைப் பொருத்து மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

தற்போது, SBI சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை, மெட்ரோ நகரங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 3,000 ரூபாய். நகர் புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 2,000 ரூபாய். கிராம புறங்களில் சேமிப்புக் கணக்கு இருந்தால் 1,000 ரூபாய் என சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டும்.

இல்லையெனில், 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அபராதம் விதிப்பார்கள். இந்த அபராதத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி போன்றவைகளும் கூடுதலாக கணக்கிட்டு நம்மிடம் இருந்து தான் வசூலிப்பார்கள். ஆனால், இனி SBI-ல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும், இனி சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது SBI நிர்வாகம். எனவே, இந்த செய்தி SBI-ல் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வயிற்றில் பால் வார்த்து உள்ளது.

இது குறித்து SBI தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், 'இந்த அறிவிப்பு மேலும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு புன்னகையையும் மகிழ்ச்சியையும் தரும். AMB-ஐ தள்ளுபடி செய்வது என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியையும், உற்சாகமான வங்கி அனுபவத்தையும் வழங்குவதற்கான மற்றொரு முயற்சியாகும். இந்த முயற்சி SBI உடனான வங்கியை நோக்கி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் SBI மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்' என அவர் கூறினார்.

இனி SBI-ல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் கடைசி ரூபாய் வரை பயன்படுத்தலாம். சுருக்கமாக 0 பேலன்ஸ்-ஆகவும் வைத்துக் கொள்ளலாம். இந்த நல்ல விஷயத்தோடு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஒவ்வொரு காலாண்டுக்கும் வசூலிக்கும் SMS கட்டணத்தையும் ரத்து செய்து இருக்கிறார்களாம். இந்தியாவின் மிகப் பெரிய வங்கியே சராசரி மாதாந்திர பேலன்ஸ் (Average Monthly Balance)-ஐ ரத்து செய்து இருக்கிறது. மற்ற அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் இந்த முறையை பின்பற்றலாம் என அரசால் புரசலாக கூறப்படுகிறது