சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறும் வரையில் அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்த போதிலும், அத்தியாவசிய பணிகளுக்காக பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பலரும் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் அலுவலக பணிகளை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். அத்தியாவசிய பணிகளுக்காக பணியாற்றி வரும் அரசு துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ''தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் அலுவலக பணிகளை மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.