கேரளத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கான 1 மாத ஊதியக் குறைப்பு முடிவுக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டுவதற்காக கேரள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ஒரு மாத ஊதியம் குறைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
மே மாதம் முதல் செப்டம்பா் வரை 5 தவணைகளில் ஒட்டுமொத்தமாக 30 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் ஊதியக் குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊழியா்களும் ஊழியா் சங்கங்களும் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
மாநில அரசின் ஊதியக் குறைப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அவா்கள் கோரியிருந்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், ஊதியக் குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த இரண்டு மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.