புதுக்கோட்டை,ஏப்.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உதவும் வகையில் ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு,வங்கிகள், காய்கறிக்கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகள்,பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் சாலைகள் போன்றவற்றில் சமூக விலகலை வலியுறுத்தும் விதத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக  பொதுமக்களுக்கு சமூக விலகலை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு செய்யும்  வகையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களில்  தன்னார்வலர்கள் இருந்தால் அவர்களை அனுப்பி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஷ்வரி அவர்கள்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி  த.விஜயலட்சுமியிடம் அறிவுரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இலுப்பூர்,அறந்தாங்கி,புதுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் பள்ளித்தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள்,இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினர்,தேசிய மாணவர் படையினர்,சாரணர்  படை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் தன்னார்வத்துடன் பணி செய்ய முன் வந்தனர்.

இவர்கள் கடந்த 2 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடை,வங்கிகள் மற்றும் காய்கறிக் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு எடுத்துக் கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறியதாவது:மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி இப்பணியில் ஈடுபட  250 க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.  பதிவு செய்த  ஆசிரியர்கள் ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து காவலர்களோடு ஊரடங்கு கண்காணிப்பு பணி மற்றும் சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை,நியாய விலைக்கடை மற்றும் வங்கிகள்,காய்கறிக்கடைகளில் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும் காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்கள்..இப்பணியை இலுப்பூர்,அறந்தாங்கி,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,கல்வித்துறையினைச்சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் ஆகியோர் காவல்துறை  , வருவாய்துறை மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கொரானோ தடுப்பு விழிப்புணர்வாக பொதுமக்களிடம் சமூக இடைவெளியினை பின்பற்றுமாறு வலியுறுத்தி தாமும்  தன்னார்வலர்களாக பணிபுரிந்தும்வருகின்றனர் என்றார்.