தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை பகிரி (Whatsapp) குழுக்களில் சேர்க்க அண்மையில் தொடக்கக்கல்வி இயக்ககம் ஆணையிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களால் அவ்வப்போது வழங்கப்படும் கல்வி சார்ந்த அறிவுரைகள் மற்றும் தகவல்கள் ஆகியவை அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விரைவில் சென்றடையும் வகையில் இக்குழுக்களை உருவாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும் அதில் அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடக்கிய குழுவாக அவை செயல்பட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால் உண்மை கள நிலவரம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வேறாக இருப்பதைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது. தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் குக்கிராமங்களில் அமைந்திருப்பதுடன் பெற்றோர்கள் பலரிடம் ஆன்ட்ராய்டு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பேச மட்டுமே பயன்படும் சாதாரண செல்பேசிகள் தாம் அதிகம் காணப்படுகின்றன. அதிகபட்சமாக 25% மாணவர்களின் பெற்றோரிடம் மட்டுமே இணைய வசதிகள் அடங்கிய செல்பேசிகள் புழக்கத்தில் இருப்பதைக் கல்வித்துறை உணருதல் அவசியம்.
இன்றுவரை அரசுப் பள்ளிகள் பாமர ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் புகலிடங்களாக இருந்து வருவதே உண்மை. பகிரி வசதி கொண்ட செல்பேசிகள் வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு தீனி போடும் நிலையில் எந்தவொரு பெற்றோரும் முன்வருவதில்லை. எமிஸ் தளத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் தொடர்பு எண் என்பது அவர்களின் சொந்த எண் அல்ல. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் ஆகியோரின் எண்களும் அதில் அடக்கம்.
பள்ளி வாரியாகவும் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் இதுபோன்று ஒரு குழுத் தொடங்கி அதில், மாணவர்கள் பாதுகாப்பு, வருகை, வீட்டுப்பாடம், செயல்திட்டம், ஐயப்பாடுகள், அறிவிப்புகள், போட்டிகள், பாட காணொலிகள் போன்றவற்றை எளிதில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் முறைப்படி இலகுவாகத் தெரிவிக்க வழியின்றி கைபிசைந்து விழிபிதுங்கி நிற்கும் ஆசிரியர்கள் ஏராளம்.
இந்நிலையில், தொடக்கக் கல்வித்துறையின் ஊரடங்கு காலப் பேரிடரில் அறிவித்திருக்கும் இந்த மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த அறிவிப்பினை முழுமையாகச் செயல்படுத்த இயலாமல் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தவிப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், இயன்றவரை கிடைக்கும் எண்களைக் கொண்டு உருவாக்கப்படும் பகிரிக் குழுவை அங்கீகரித்து ஆசிரியர் நலன் காப்பது நல்லது. இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு அளித்து எதிர்வரும் காலங்களில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் விலையில்லா ஆன்ட்ராய்டு செல்பேசி ஒன்றை வழங்கி பெற்றோர் உதவியுடன் நல்லமுறையில் கையாள, தக்க ஆவனச் செய்வதென்பது உரிய உகந்த பயனுள்ள நடவடிக்கை ஆகும்.