12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு – செய்முறைத் தேர்வு நடத்துதல் -  இயக்குநர் அறிவுரை
 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீட்டில், +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது எனவும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு (Practicals) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 Exam Postponed DGE Proceeding 

இப்பொருள் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 05.05.2021 முதல் 21.05.2021 மற்றும் 31.05.2021 ஆகிய நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

2. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு பின்னர் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம், தேர்வுகள் துவங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும்.

3. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தினை தெரிவிக்குமாறும், தலைமையாசிரியர்கள் வாயிலாக பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இவ்விவரத்தினை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வு (Practical Examination) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி, பார்வை 2ல் காணும் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு   நெறிமுறைகளின்படி நடத்தப்படவேண்டும் என்பதை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வேண்டும்

5. செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாட்களில் இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.