டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் போன்ற சேனல்களை நம் தமிழ் நாடு அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், உயர்தர அதிநவீன HD தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? வீடியோ மற்றும் ஆடியோ கிளாரிட்டி தவிர, வேறு ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. HD தொலைக்காட்சியில் வண்ணங்கள் சற்று அதிகமாகவும், துல்லியமாகவும் தெரியும். உதாரணமாக, சாதாரண தொலைக்காட்சியில் கருநீலக் நிறத்தில் தெரியும் ஒரு விஷயம், HD தொலைக்காட்சியில் நீல நிற குடும்பத்தை சார்ந்த வேறு ஒரு வண்ணத்தில் தெரியலாம். அதுவே அதன் நிஜ வண்ணமாகவும் இருக்கும்! இப்போது இதையே நிஜ உலகில் பொருத்திப் பாப்போம். நம் கண்கள் எல்லாம் சாதாரண தொலைக்காட்சி என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு சிலருக்காவது HD தொலைக்காட்சியைப் போன்ற கண்கள் இருக்கலாமல்லவா? நமக்கெல்லாம் 1-7 மில்லியன் நிறங்கள் வரை தெரிகிறது என்றால், அவர்களுக்கு 100 மில்லியன் நிறங்கள் (10 கோடி) வரை தெரிய வாய்ப்புண்டு. அவர்கள் தான் சூப்பர் விஷன் கொண்டவர்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Tetrachromat மனிதன் தெரியுமா?
அது என்ன Tetrachromat? நிறங்களைப் பிரித்து உணர, நம்மைப் போன்ற மனிதர்களுக்கு, நம் கண்களில் 3 வகை கோன் செல்கள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கோன் செல்களும் 100 வகை நிற வேறுபாடுகளைச் சுலபமாக கண்டறிய உதவும். மூன்று வகை கோன் செல்களும் ஒன்று சேர்ந்து செயல்படும் போது இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்கிறது. சராசரியாக, சில மில்லியன் கணக்கில் வித விதமான வண்ணங்களை நாம் பிரித்தறிய முடியும். இப்படி 3 கோன் செல்கள் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் Trichromat (Tri - மூன்று) என்று அழைக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு சாரருக்கு, அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு சில வகை மனிதர்களுக்கு மட்டும் இந்தக் கோன் செல்கள் 4 இடம்பெற்றிருக்கும். இந்த வகை மனிதர்களால், நம்மால் பார்க்க முடியாத வண்ணங்களைக் கூட பார்க்க முடியும். அறிவியலாளர்களின் கருத்துப்படி அவர்களால் கிட்டத்தட்ட 100 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி புரிந்து கொள்ள முடியும். அதாவது நம்மை விடப் பல மடங்கு நிறங்களை அவர்கள் பூமியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தான் Tetrachromat (Tetra - நான்கு)  என்று அழைக்கிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களுக்கு அப்படி ஒரு திறன் இருப்பது அவர்களுக்கே தெரியாது. ஏதோ இப்படி தான் அனைவருக்குமே உலகம் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் அவர்கள்.



எப்படி உருவாகிறார்கள்?
அறிவியல் உலகில் ஒரு சூப்பர் விஷன் கொண்ட சூப்பர் ஹீரோக்களாக கருதப்படும் இவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை அறிவியல் பூர்வமாக இப்படி விளக்குகிறார்கள். நாம் ஒரு வருடத்தில் சந்திக்கும் மனிதர்களில் குறைந்தபட்சம் ஒரு 10 நபருக்காவது நிறக் குருடு என்ற ஒன்று இருக்கக்கூடும். அவர்களால் அனைத்து நிறங்களையும் பார்க்க முடியாது, அல்லது ஒரு சில நிறங்களை மட்டும் பார்க்க முடியாது. இவ்வகை மனிதர்களுக்கு, 3 கோன் செல்கள் செயல்படாமல், வெறும் 2 கோன் செல்கள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவர்களால் மொத்தமே 10,000 வகை நிற வேறுபாடுகளை மட்டுமே உணர முடியும். இவ்வகை மனிதர்களின் வம்சத்தை ஆராய்ந்த போது ஒரு ஆச்சர்யமூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிறக்குருடு உள்ளவர்களின் பெரும்பாலானவர்களின் தாய் அல்லது மகள்களுக்கு 4 வகை கோன் செல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவர்களுக்கு 3 கோன் செல்கள் மட்டுமே செயல்படுகிறது. நான்காவது மரபுபிறழ்ந்த ஒன்றாகவே இருக்கிறது. இதனால், 4 கோன் செல்கள் இருந்தாலும், அவர்களால் கூடுதல் நிறங்களைப் பார்க்கமுடியாமல், நம்மைப் போல் சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

Tetrachromat மனிதனைத் தேடி ஒரு பயணம்
டாக்டர் கேப்ரியே ஜோர்டான் புகழ்பெற்ற நியூரோசயின்ஸ் நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார். இவரின் தேடல், தொட நினைத்த அந்த மைல்கல், சற்றே கடினமான ஒன்று. அவர் இலக்கு எல்லாம் 4 கோன் செல்களும் சீராக இயங்கும் Tetrachromat ஒருவரைக் கண்டுபிடிப்பது தான். அப்படி 4 செல்களும் சிறப்பாக செயல்படும் ஒருவரால், நம்மை விடப் பல மடங்கு நிறங்களைக் காண முடியும் என்று கூறி வந்தார் டாக்டர் ஜோர்டான். அவரின் ஆராய்ச்சிப்படி, இவ்வகை திறன் பெரும்பாலும் பெண்களுக்கே இருப்பதாகவும், அவர்கள் இந்த உலக மக்கள் தொகையில், வெறும் 12 சதவீதமே என்பதையும் கண்டறிந்திருக்கிறார். அப்படி ஒரு பெண்ணை தேடி 20 வருடங்கள் அழைத்திருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில், அவர் பார்வையில் உலகம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண் மருத்துவத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பது அவர் எண்ணம்.



20 ஆண்டு தேடலின் விடை
அப்படி ஒரு நாள், நிறக்குருடு உள்ள ஆண்களின் மகள்களில், ஒரு 25 பேரைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அவர்கள் முன், வெவ்வேறு நிறங்கள் கொண்ட மூன்று வகை வெளிச்சங்கள் பாய்ச்சப்பட்டன. 3 கோன் செல்கள் மட்டுமே செயல்படும் ஒருவரால், இந்த நிறங்களைப் பிரித்து அறிய முடியாது. இதே ஒரு Tetrachromat மனிதரால் நிச்சயம் அந்த 3 நிறங்களையும் பிரித்து உணர முடியும். 20 ஆண்டு காலமாக அப்படி ஒருவரைத் தேடிய டாக்டர் கேப்ரியே ஜோர்டானிற்கு அன்று அடித்தது ஜாக்பாட்! கிடைத்தார் ஒரு Tetrachromat! பரிசோதனை எண் cDa29 என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்மணி, வடக்கு இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு மருத்துவர். இயல்பாகவே நல்ல பார்வைத் திறன் கொண்ட அவருக்கு, தனக்கு அப்படி ஒரு சூப்பர் பவர் இருக்கிறது என்பதை உணர்ந்ததே இல்லை என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால், அவரின் பெயர் மற்றும் பிற விபரங்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. இது குறித்து மகிழ்ச்சி பொங்க டாக்டர் கேப்ரியே ஜோர்டான் அளித்த பேட்டியில், “1948ஆம் வருடத்தில் இருந்தே Tetrachromat குறித்த ஆராய்ச்சிகள் இருந்து வந்தன. ஆனால், அவை வெறும் தியரிகளாகவே பார்க்கப்பட்டது. இப்போது அது நிஜமாகி விட்டது! ஆனால், 4 கோன் செல்கள் இருக்கும் அனைவராலும் ஏன் ஒரு Tetrachromat ஆகச் செயல்பட முடியவில்லை என்பதை இன்னமும் அறிய முடியவில்லை. இன்னொரு தடை என்னவென்றால், Tetrachromatகளின் உலகம் எப்படி இருக்கிறது, நிறங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை 3 செல்கள் மட்டுமே இருக்கும் நம்மைப் போன்ற Trichromat-களால் உணரவே முடியாமல் போகலாம்” என்று தெரிவித்தார்.

Trichromat-களால் ஆன உலகம்


இது இப்படி இருக்க, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பார்வை ஆராய்ச்சியாளரான ஜே நெயிட்ஸ் பேசுகையில், “கணினி மூலம் விதவிதமான நிறங்களை உருவாக்கி ஒரு Tetrachromat-டை நம்மால் பரிசோதிக்க முடியும். ஆனால், இன்று நாம் காணும் உலகம் என்பது, உங்களையும் என்னையும் போன்ற Trichromat-களால் உருவாக்கப்பட்ட உலகம். இதில், Tetrachromat-களுக்கு மட்டும் தெரியும் நிறங்கள் இல்லமாலே இருக்கலாம். அவ்வகை நிறங்கள் பூமியிலேயே எங்கும் இல்லாமலும் இருக்கலாம்” என்று வருத்தத்துடன் தன் கருத்தைத் தெரிவித்தார்