பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரம் குறிப்பிடும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்த ஆண்டு முதல் SSLC, HSC மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் அவர்களின் தலைப்பெழுத்துடன் (ENGLISH) கூடிய பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ்ப் பெயரில் ஏற்படும்சில எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு பள்ளிகளால் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் (T.C) இனிமேல் பெயர்களைத் தலைப்பெழுத்துடன் தமிழில் குறிப்பிட்டு வழங்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

SSLC தேர்வெழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், பள்ளியில் படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து இடையில் நின்றவர்கள் மற்றும் பள்ளி மாணவராக 10-ம் வகுப்பு தேர்வெழுதுவோர் ஆகியோருக்கும் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் தமிழில் தலைப்பெழுத்துடன் பெயர் குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.