மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப். 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தடையின்றிக் கல்வி பெறும் வகையில், பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க செப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரமும் வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரைப் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐடிஐ-க்களில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப். 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேசிய கல்வி உதவித் தொகை திட்ட இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.