புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தரமான புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், கல்வியாளர்கள், அறிவியல் நிபுணர்கள் அடங்கிய பாடத் திட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளி கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎன்.கிருபாகரன், பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன்உள்ளிட்ட எந்தக் குழு உறுப்பினர்களையும் நீக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக இருந்த உதயச்சந்திரனை நீக்கிவிட்டு, பிரதீப்யாதவ் என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியை அத்துறையின் செயலாளராக நியமித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது நீதிபதி என்.கிருபாகரன்,மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசு தேவையில்லாமல் தலையிடக் கூடாது. உதயச்சந்திரனை மாற்றக்கூடாது என ஏற்கெனவே உத்தரவிட்டும் அவரை மாற்றியது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் அத்துறையில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், அத்துறையின் முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார். மேலும் புதிய பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகின்ற நவம்பரில் புதிய பாடத்திட்டத்தின் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். 
இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் இருந்து அதிகாரி உதயச்சந்திரன் நீக்கப்படவில்லை என்பதை மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.