வான்னக்ரை போன்று, லாக்கி என்ற புதிய வகை ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவதாக, கணினி உபயோகிப்பாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் உள்ள எந்த கம்ப்யூட்டரிலும் ஊடுருவும் வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை தயாரித்த மென்பொருள் மூலம் WannaCry என்ற பெயரில் ரேன்சம்வேர் வைரஸை கடந்த மே மாதம் ஹேக்கர்கள் பரவவிட்டனர். இந்தியா உள்பட சுமார் 150 நாடுகளில் லட்சக்கணக்கான கம்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸை நீக்க கம்யூட்டர் ஒன்றுக்கு 300 முதல் 600 டாலர் வரை பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஹேக்கர்களின் அட்டூழியத்தால், பிரிட்டன் மருத்துவமனைகள், பெடெக்ஸ் கூரியர் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள ஏராளமான தொழில்நிறுவனங்கள், தென் இந்தியாவில் இரண்டு வங்கிகள், ஆந்திர காவல்துறை ஆகியவற்றின் கணினிகளும் முடங்கின.

இந்த பிரச்சனைக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனம் புதிய அப்டேட்டுகளை வழங்கி முடிவு கட்டிய நிலையில், தற்போது, லாக்கி ரேன்சம்வேர் ((Locky Ransomware)) என்ற புதிய வைரஸ் பரவவிடப்படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிண்ட், டாக்குமெண்ட், போட்டோ, இமேஜ், ஸ்கேன், பிக்சர் என்ற பெயர்களில் குறுஞ்செய்திகள் மற்றும் இமெயில்களை அனுப்பி, அதை திறந்தால் லாக்கி ரேன்சம்வேர் வைரஸ் பரவ விடப்படுவதாகவும், இதனால் பாதிக்கப்படும் கணினிகளை வைரஸை விடுவிக்க இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பிணைத்தொகை கேட்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், தேவையில்லாத மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் இமெயில்கள் மற்றும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.