வாகன ஓட்டுனர்கள் தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக அசல் வாகனஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்குதொடரப்பட்டது. லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தமிழக அரசின் உத்தரவு மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்டகருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று முதல் வாகனம் ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். சோதனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்ட கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. மேலும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசின்இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் போக்குவரத்து துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழகம்முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். சென்னை நகரில் அண்ணாசாலை, பீச் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.