இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின், மாநில பொதுச் செயலர், ராபர்ட் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தாக்கல் செய்த மனு:ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என, 2011நவம்பரில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, 2011 நவ., 15க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பர். 2௦௦6 மே, 31க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நியமிக்கப்பட்டோருக்கும் இடையே, சம்பள முரண்பாடு உள்ளது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்களும், தேர்வு இல்லாமல் நியமனம் பெற்றவர்களும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை பாடம் நடத்துகிறோம். எங்களுக்கு இடையே பணி வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், சம்பளத்தில் முரண்பாடு உள்ளது.எனவே, சம்பள முரண்பாட்டை நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற அடிப்படையில், இதர இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, எங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி, டி.ராஜா விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 17க்கு தள்ளி வைத்தார்.