மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே ஆதார் கார்டுகளை
எளிதில் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் நடவடிக்கையாக அஞ்சல் துறை, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பயோமெட்ரிக் சாதனங்களை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பயோமெட்ரிக் கருவியுடன் ஆதார் விண்ணப்பிக்கும் வசதி 13 தபால் அலுவலகங்களில் மட்டுமே இயங்கிவருகிறது. இன்னும் 72 தபால் அலுவலகங்களில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் வசதி உள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக பயோமெட்ரிக் கருவிகள் கொள்முதல் செய்து ஆதார் விண்ணப்பிக்கும் வசதியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் அஞ்சல் துறை ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து தமிழக வட்டார தலைமை அஞ்சல் நிலைய அதிகாரியான எம்.சம்பத் கூறுகையில், "ஆதார் கார்டுகளில் திருமண நிலை மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய மாற்றங்கள் சீர் செய்யும் வசதி தமிழகம் முழுதும் 1435 தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருப்பூரில் 12க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் தேவையான பயோமெட்ரிக் கருவிகளுடன் ஆதார் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமீப காலமாக ஆதார் கார்டுகளில் வரும் பிழை குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு, " ஆரம்பக் காலத்தில் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு விண்ணப்பிக்க போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் இதுபோன்ற புகார்கள் வந்தன. சென்னை தலைமை தபால் அலுவலகம் அவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. இனி அதுபோன்று தவறுகள் நடக்காது. ஆதார் விண்ணப்பத்தின் போது வடகிழக்கு இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலைபார்ப்பவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்." என்று உறுதியளித்துள்ளார்.