தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிச. 8-ஆம் தேதி முதல் டிச.23ஆம் தேதி வரை அரையாண்டுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறைகள் முடிவடைந்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில், அனைத்து மாவட்டங்களுக்கு தேவையான 1.25 கோடி பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை பிரித்து அனுப்பி வைத்தனர். தற்போது மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் முதல்நாளிலேயே வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.