ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களைக் 
கவர்வதற்காகப் புதிதாக 157 புதிய எமோஜிகள் குறித்த தகவலை எமோஜிபீடியா நேற்று முன்தினம் (பிப்ரவரி 8) வெளியிட்டுள்ளது.

மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னர் உடல்மொழிகளைப் பயன்படுத்தியும், முகபாவங்களை வைத்தும் தனது மனதில் தோன்றும் கருத்துகளை மற்றவர்களுக்குத் தெரிவித்து வந்துள்ளனர். இந்த வசதிகளை தொழில்நுட்பத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டதே எமோஜிகள். ஒருவரின் உண்மையான உணர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த எமோஜிகள் பல்வேறு வருடங்களாக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிதாக இதுவரை இல்லாத 157 புதிய எமோஜிகளை எமோஜிபீடியா நேற்று அறிமுகம் செய்துள்ளது.வார்த்தைகளுக்குப் பதிலாக எமோஜிகள் மூலம் உணர்ச்சிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏனெனில் ஒரு சொல்லினை சொல்லும் விதம் என்பது மிக முக்கியமானது. அதைப் பிறருக்குப் புரியும்விதத்தில் மெசேஜ்களில் கூறிவிட இயலாது என்பது நிதர்சனம். ஆனால், அதனுடன் இணைக்கப்படும் ஒரு சிறு எமோஜி அந்த மெசேஜில் உள்ள தகவலைப் பயனர் எந்த அர்த்தம்கொண்டு அனுப்பி உள்ளார், அவர் எந்த மனநிலையில் உள்ளார் என்பதை வெளிப்படுத்தும்.

இதற்காக எமோஜிபீடியா இந்த 157 புதிய எமோஜிகளை குறித்த வீடியோ பதிவையும், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக சூப்பர் ஹீரோஸ், சூப்பர் வில்லன்ஸ், சிகப்பு தலைகொண்ட மனிதர்கள், சுருண்ட முடியுடன் கூடிய தலை, கால், பாதங்கள், கங்காரு, காந்தம், தேள் மற்றும் மேலும் பல சிறப்பு எமோஜிகளை இணைத்துள்ளது. இந்தப் புதிய எமோஜிகள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.