கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்' என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எஸ்.பரிமளம் தாக்கல் செய்த மனுவில், 'இந்த கல்வி ஆண்டு முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது வரை பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை 3 ஆண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.