திண்டுக்கல்: இணையதள வசதி இல்லாத அலைபேசியிலும்
பணபரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தில் 12.50 கோடி பேர் சேமிப்பு கணக்கு துவக்கி உள்ளனர்.
பணமில்லா பரிவர்த்தனைக்காக அனைத்து வங்கி கணக்குடனும் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கப்பட்டு வருகிறது. 'ஸ்மார்ட் போன்' இல்லாத இணைய தள வசதி இல்லாத அலைபேசியிலும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வகையிலான செயலியை (ஆப்) வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன.திண்டுக்கல்லில் பணமில்லா பரிவர்த்தனை குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.இதில் கனரா வங்கி நிதிசார் கல்வி மைய ஆலோசகர் சிவசுப்பிரமணியம் பேசியதாவது: இணைய வசதி இல்லாமல் சாதாரண அலைபேசியில் பணபரிவர்த்தனை செய்யலாம். இந்த புதிய கட்டண சேவைக்கு யு.எஸ்.எஸ்.டி. *99# என்ற சேவையை வங்கி அறிமுகம் செய்துள்ளது.இச் சேவையை பெற வங்கி கிளையில் பதிவு செய்துள்ள சாதாரண அலைபேசி எண்ணில் இருந்தே, *99# என டைப் செய்து அழைக்கவும். போனில் யு.எஸ்.எஸ்.டி.,ரன்னிங் அடுத்து வெல்கம் என வரும். பின்பு மொழியை தேர்வு செய்யலாம். ஆங்கிலத்திற்கு எண் 1, தமிழுக்கு எண், 3 ஐ அழுத்தவும். அதன்பின் உங்கள் வங்கியின் முதல் மூன்று எழுத்துக்களை (எஸ்.பி.ஐ., அல்லது சி.பி.யூ., போன்றவை) பெரிய எழுத்துகளில் பதியவும். அல்லது ஐ.எப்.சி கோடு எண்ணை பதிய வேண்டும். தொடர்ந்து வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் ஏ.டி.எம். கார்டின் கடைசி 6 இலக்க எண்களை பதிவு செய்யவும். அடுத்து சிறிது இடைவெளி விட்டு ஏ.டி.எம். கார்டு முடியும் மாதம், வருடத்தை பதிவு செய்ய வேண்டும்.தொடர்ந்து மனதில் மறக்காமல் இருக்க கூடிய ஒன்டைம் பாஸ்வேர்ட் ஆக 6 எண்களை ரகசிய எண்ணாக பதியவும், அதே எண்களை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். ரகசிய எண்ணை பதிவு செய்த உடன் உங்கள் கணக்கின் இருப்பு விபரம் திரையில் தோன்றும். இதில் தினமும் ரூ. 5 ஆயிரம் வரை வங்கி கட்டணம் இன்றியே பணம் அனுப்பலாம். இப் புதிய வசதியினை 24 மணிநேரமும் பயன்படுத்தலாம். பாதுகாப்பானதும்கூட, என்றார்.