தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.