அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கி உள்ள தமிழக அரசு ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–கணினி வழியில் கல்வி கற்பிக்கும் பகையில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தும் நிலையில், 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ‘365’ என்ற மென்பொருளை ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் இலவசமாக தரவுள்ளது.

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் வடக்கு, ஒசூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிக்கூடத்தையும், சென்னையில் எழும்பூர் மாகாண மகளிர் பள்ளி மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளை தத்தெடுத்துள்ளது.இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ‘கிளவ்ட் கம்ப்யூட்டிங்’ என்ற தொழில்நுட்பத்தை பள்ளிகளில் பயன்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.