தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம்.
ஆனால், இந்தத் தண்ணீர் பிரச்சனை கேப் டவுனில் மட்டுமல்ல. உலகில் மற்ற முக்கிய நகரங்களிலும் உள்ளது. பல நிபுணர்கள் தண்ணீர் நெருக்கடி குறித்து ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
உலகில் 100 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் கிடைக்காமல் போவதற்கு, பருவநிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு என பல காரணங்கள் உள்ளன.
கேப் டவுனில் மட்டுமல்ல, கீழ் உள்ள உலகின் 8 முக்கிய நகரங்களிலும் விரைவில் தண்ணீர் பிரச்சனை ஏற்படலாம். அந்த நகரங்கள் எவை?
ஸா பாலோ
பிரேசிலின் பொருளாதார தலைநகரமாக அழைக்கப்படும் ஸா பாலோ, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஒன்று. கேப் டவுனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, 2015-ம் ஆண்டு ஸா பாலோ நகரத்திலும் ஏற்பட்டது. அப்போது இங்கிருந்த முக்கிய ஏரியும் 4% தண்ணீர் மட்டுமே இருந்தது.
2016-ம் ஆண்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் நகரின் முக்கிய ஏரியில், எதிர்பார்த்த அளவை விட 15% குறைவாகத் தண்ணீரே உள்ளது.
பெங்களூரு

பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி, அங்குள்ள நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமான இங்கு, வடிகால் வசதி மற்றும் குடிநீர் வசதியை சிறப்பானதாக மாற்ற பல மாற்றங்களை செய்து வருகின்றனர்.
பழைய குடிநீர் குழாய்கள் பழுது பார்க்க வேண்டியது அவசியம். நகரத்திற்கு தேவையான குடிநீரில், பாதியளவு தண்ணீர் குழாய் சசிவினால் வீணாகிறது என அரசு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் உள்ள தண்ணீர் மாசு பிரச்சனைக்கு பெங்களூரு மட்டும் விதிவிலக்கல்ல. இங்குள்ள 85% ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், இதனைப் பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
பெய்ஜிங்
ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்கு குறைவாகச் சென்றால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என உலக வங்கி நம்புகிறது.
ஆனால், 2014-ம் ஆண்டு பெய்ஜிங்கில்இருந்த 2 மில்லியன் மக்களுக்கு 145 கன மீட்டர் தண்ணீரே கிடைத்தது.

உலகில் 20% மக்கள் தொகை சீனாவில் இருந்தாலும், இங்கு வெறும் 7% நல்ல தண்ணீரே உள்ளது.
2015-ம் ஆண்டு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, பெய்ஜிங் உள்ள மாசடைந்த தண்ணீரை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாது என கூறியுள்ளனர்.
கெய்ரோ
எகிப்துக்கு தேவையான 97% தண்ணீர் நைல் நதி மூலமே கிடைக்கிறது. ஆனால், தற்போது மாசடைந்த நைல் நதி தண்ணீரே விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கிடைக்கிறது.

தண்ணீர் மாசு தொடர்பான மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் எகிப்தும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஜகார்த்தா
கடற்கரையில் உள்ள மற்ற நகரங்கள் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, கடல் நீர்மட்டம் உயர்ந்து வரும் சவாலை ஜகார்த்தாவும் எதிர்கொண்டுள்ளது.

இந்தோனீசிய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் பொது குடிநீர் வசதி கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட சட்டவிரோத கிணறுகளால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மெக்சிகோ நகரம்
இந்த நகரத்தில் வாழும், ஐந்து பேரில் ஒருவருக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் 40% தண்ணீர் வீணாகிறது.

இஸ்தான்புல்:
2016-ம் ஆண்டு ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டாருக்கும் குறைவாகச் சென்றது.
2030-ல் தண்ணீர் பற்றாக்குறை மோசமாகலாம் என உள்ளூர் நிபுணர்கள் நம்புகின்றனர்.