சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதியதாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மாநில அளவிலான செட் தகுதித்தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில அளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று காலை 9.30 மணியளவில் தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதல் தாள் தேர்வும், 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது.
இந் தேர்வை தமிழகம் முழுவதும் 41 ஆயிரம் பேர் எழுதியதாகவும், 3 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என அன்னை தெரசா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 9 ஆயிரத்து 923 பேர் செட் தகுதித்தேர்வை எழுதினர் என தெரிவித்துள்ளது.